லிப்ரெவில்லி:
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு காபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் வரும் 7-ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் காபோன் நாட்டின் லிப்ரெவில்லி நகர விமான நிலையம் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா அடாமோ ஆகியோர் வெங்கையா நாயுடு மற்றும் அவரது மனைவியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர்.
இந்நிலையில், காபோன் அதிபர் அலி பாங்கோ ஒண்டிம்பாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டாவை துணை ஜனாதிபாதி வெங்கையா நாயுடு இன்று மாலை சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், காபோன் தொழில்துறையினருடன் கலந்துரையாடும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய வம்சாவளியினரையும் சந்திக்கிறார்.