கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஒரு காலத்தில் கூறப்பட்ட நிலையில் தற்போது கிரிப்டோகரன்சி மதிப்பு படிப்படியாக சரிந்து வருவதைப் பார்க்கும்போது கிரிப்டோகரன்சி பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்று தான் பல முதலீட்டாளர்கள் நினைத்து வருகின்றனர்.
குறிப்பாக லூனா என்ற கிரிப்டோகரன்சி கடந்த 2021 ஆம் ஆண்டு 10 டாலரிலிருந்து மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து 110 டாலருக்கு சென்றது. ஆனால் திடீரென சரிவை கண்ட லூனா கிரிப்டோகரன்சி, பத்தே மாதத்தில் 0.01 டாலர் என்று சரிந்தது . இதனால் இதில் முதலீடு செய்தவர்கள் ஒட்டுமொத்தமாக தலையில் துண்டு போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!
கிரிப்டோகரன்சி என்பது ஒரு சட்டபூர்வமற்ற முதலீடு என்பதை ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்தனர். அதில் முதலீடு செய்வதால் 500%, 1000% கிடைக்கும் என்ற போலியான அறிவிப்புகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்தனர்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி
ஆனால் மிகப் பெரிய அளவில் லாபம் கிடைத்ததால் இந்தியாவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆனது. அதேபோல் இந்தியாவில் கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தன.
மசோதா
இந்த நிலையில்தான் திடீரென இந்திய அரசு கிரிப்டோகரன்சியை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை செய்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, கிரிப்டோகரன்சி லாபத்தின் மீதி 30% வரிகளும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் ஒரு சதவீதம் டிடிஎஸ் விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்தே இந்தியாவில் கிரிப்டோகரன்சி மதிப்பு சரிய தொடங்கியது. அது மட்டுமின்றி இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு உயர உயர கிரிப்டோகரன்சி மதிப்பும் உயர ஆரம்பித்ததால் இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
கிறிஸ்டின் லகார்ட்
இந்த நிலையில் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும்போது கிரிப்டோகரன்சி என்பது மதிப்பில்லாதது என்றும், ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாதது என்றும் கூறினார். ஆரம்பம் முதலே கிரிப்டோகரன்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிறிஸ்டின் லகார்ட், கிரிப்டோகரன்சி என்பது எதனை அடிப்படையாகக் கொண்டது என்ற எந்தவித தகவலும் இல்லை என்றும், நம்பகத்தன்மை அற்றது என்றும், எனவே அவற்றை உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசுகளும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்
ஏமாற்றம்
எந்தவித விதிகளும் இல்லாமல் இருக்கும் அமைப்பில் முதலீடு செய்யக்கூடாது என்றும் அது ஆரம்பத்தில் நல்ல லாபத்தை தருவது போல் இருந்தாலும் பின்னாளில் மிகமோசமான ஏமாற்றத்தை தரும் என்றும் அவர் கூறினார்.
கிரிப்டோ வேண்டாம்
மேலும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய கிறிஸ்டின் லகார்ட், கிரிப்டோகரன்ஸி என்பது வெறும் ஊகத்தின் அடிப்படையிலான முதலீடு என்றும், மிகவும் ஆபத்தான முதலீடு என்றும், எனவே இளைஞர்களாகிய நீங்கள் கிரிப்டோவில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
அறிவுரை
மொத்தத்தில் பொருளாதார அறிஞர்கள் முதலீடு செய்பவர்களுக்கு கூறும் அறிவுரை என்னவென்றால் ஆண்டுக்கு 10 முதல் 20 சதவீதத்திற்கு மேல் வருமானம் தரும் எந்த ஒரு முதலீடும் பின்னாளில் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்று கூறுகின்றனர்.
Christine Lagarde, President Of The European Central Bank, Says Cryptocurrencies Are Based On Nothing
Christine Lagarde, President Of The European Central Bank, Says Cryptocurrencies Are Based On Nothing | கிரிப்டோகரன்சி இனி ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை: மத்திய வங்கி தலைவர்