குடிமைப் பணித் தேர்வில் வெற்றியை அடையும் வரை முயற்சியை கைவிடக் கூடாது: மாநில அளவில் முதலிடம் பிடித்த ஸ்வாதிஸ்ரீ கருத்து

கோவை: குடிமைப் பணித் தேர்வில், வெற்றியை அடையும் வரை முயற்சியை கைவிடக் கூடாது என மாநில அளவில் முதலிடம் பிடித்த கோவையைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ தெரிவித்துள்ளார்.மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், 2021-ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், கோவை துடியலூர் அருகேயுள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த கே.தியாகராஜன் – ஜி.லட்சுமி தம்பதியின் மகள் ஸ்வாதிஸ்ரீ(25) குடிமைப் பணித் தேர்வில் அகில இந்தியளவில் 42-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

குன்னூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ஸ்வாதிஸ்ரீ, தஞ்சாவூரிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட ஆர்.வி.எஸ் கல்லூரியில் வேளாண்மை பட்டப்படிப்பை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் படித்து முடித்தார். அதன் பின்னர், குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகி வந்தார். அகில இந்திய அளவில் 42-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்தது தொடர்பாக ஸ்வாதிசி ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: இந்த முதலிடம் எனது விடாமுயற்சிக்கு கிடைத்த பலனாக பார்க்கிறேன்.

நான் முதல் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வு எழுதினேன். அதில் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றாலும், முதன்மைத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு மீண்டும் குடிமைப் பணித் தேர்வை எழுதினேன். முதல் நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 126-வது இடத்தைப் பிடித்து ஐ.ஆர்.எஸ் பணிக்கு தேர்வானேன். இருப்பினும், ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற எனது இலக்கை எட்ட மீண்டும் குடிமைப் பணித் தேர்வை எழுத முடிவு செய்தேன்.

அதற்காக, ஐ.ஆர்.எஸ் பணிக்கு உடனடியாக செல்லாமல் விடுப்பு எடுத்தேன். அந்த விடுப்பு காலத்தை படிக்க
பயன்படுத்தினேன். முதல்முறையாக தேர்வு எழுதியபோது, சென்னையில் உள்ள 2 பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற்றேன். இந்தத் தேர்வுக்கு பயிற்சியை வீட்டில் இருந்தே எடுத்துக் கொண்டேன். அதேசமயம், ஆலோசனைகளையும், பயிற்சி கேள்வித்தாள்களையும் பயிற்சி நிறுவனத்திடம் இருந்து பெற்றேன். தினமும் படிக்க நேரம் நிர்ணயம் செய்தது இல்லை. அதேசமயம், ஒரு நாளைக்கு இவ்வளவு பாடங்கள் படிக்க வேண்டும் என முடிவெடுத்துவிடுவேன். அந்த பாடங்களை முழுமையாக படித்து முடித்து, அதில் முக்கியமானவற்றை எழுதிப் பார்த்த பின்னர் தான் அன்றைய தினத்தை முடிப்பேன்.

நாட்டிலேயே மிகவும் கடிமான தேர்வுகளில் ஒன்றாக குடிமைப் பணித் தேர்வு கூறப்படுகிறது. நான் சிலபஸ் முறை கேள்விகளின் வகைகளை தெரிந்து, புரிந்து கொண்டு அதற்கேற்ப தயார்படுத்திக் கொண்டேன். பயிற்சி மையங்களில் இருந்து கேள்வித் தாள்களை வாங்கி அடிக்கடி பதில் எழுதிப் பார்த்துக் கொள்வேன். எனது தந்தை பங்கு வர்த்தகத் தொழில், காப்பீடு நிறுவன ஏஜென்ட்டாக பணியாற்றுகிறார்.

தாயார் அஞ்சல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்திரா என்ற சகோதரி உள்ளார். நான் குடிமைப் பணித் தேர்வை எழுத எனது பெற்றோர், சகோதரி முழு ஒத்துழைப்பு அளித்தனர். சலிப்படையாமல் தொடர்ந்து படிக்க ஊக்குவித்தனர். முதல் முறை தோல் வியடைந்ததால் நான் எனது இலக்கையும், முயற்சியையும் கைவிடவில்லை. தொடர்ந்து படித்தேன். விடா முயற்சியே எனது வெற்றிக்குகாரணம். வெற்றி என்ற இலக்கை அடையும் வரை தேர்வர்கள் முயற்சியை கைவிடக் கூடாது. நான் அரசின் திட்டங்கள் எளிய மக்களைச் சென்றடைவதில் முக்கிய கவனம் செலுத்துவேன் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.