ஐக்கிய நாடுகள்: குரங்கு அம்மை நோய்த் தொற்றை எல்ஜிபிடி சமூகத்தினருடனும், ஆப்பிரிக்க மக்களுடனும் தொடர்புப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது
குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய் இது. குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ்.
குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குப் பரவலாம். கரோனாவைப் போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மலின் மூலமும் அது மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.
பொதுவாக, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே இது மனிதர்களுக்குப் பரவும். தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளைத் தொடுவதன் மூலமோ, அதன் உடல் திரவங்கள் மூலமாகவோ அது மனிதர்களுக்குப் பரவுகிறது. குறிப்பாக எலி, அணில் போன்ற விலங்குகளிடமிருந்து இந்த நோய், பரவுவதாகக் கூறப்படுகிறது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியைச் சரியாக வேக வைக்காமல் சாப்பிடுவதே நோய்ப் பரவுதலுக்கான முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஒரு தரப்பினரால் குரங்கு அம்மை தொற்று நோயை நிற ரீதியான தொற்று நோயாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி குரங்கு அம்மை நோய்கள் பெரும்பாலும் ஐரோப்பா நாடுகளில்தான் கண்டறியப்பட்டுள்ளன. எனினும், குரங்கு அம்மை தொற்று நோயை ஆப்பிரிக்க மக்களுடனே ஐரோப்பிய ஊடகங்கள் தொடர்புபடுத்துகின்றன.
கிட்டத்தட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை தொற்று 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான நோய்த்தொற்றுகள் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன. மேலும், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் குரங்கு அம்மை தொற்று பாதிப்புகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “குரங்கு அம்மை தொற்று எல்ஜிபிடி மக்களுக்குத்தான் பரவுகிறது. இது ஆப்பிரிக்காவிலிருந்து பரவிய தொற்று என பல தவறான கருத்துகள் நிலவுகிறது. முற்றிலும் இது தவறு.
குரங்கு அம்மை நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இவ்வாறான வதந்திகளினால் நோயின் தீவிரத் தன்மையை மக்களுக்கு உணர்த்த முடியாத நிலைமை ஏற்படுகிறது. இம்மாதிரியான வதந்திகளால் சுகாதார சேவைகள் பாதிக்கின்றன. உண்மையில் சரியான மருத்துவ நடவடிக்கை மூலம் குரங்கு அம்மை தொற்றை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.