பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது.
கொலையுடன் தொடர்புடையவரான 29 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
கடைக்கு சென்ற சிறுமி மாயம்
அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதனால் மகள் கோழி இறைச்சி கறி கேட்டார். அவருக்கு கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பம்.
நான் வாங்கி வருகிறேன் என கூறி 250 ரூபாய் பணத்தையும் ஆயிஷா பெற்றுக் கொண்டார்.
அருகிலுள்ள கடைக்கு சென்று வருமாறு கூறினேன்.
அங்கு 3 முறை சென்று வந்தார். எனினும் அங்கு கோழி இறைச்சி இல்லாமையினால் சற்று தொலைவில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதற்கு முன்னரும் அந்தக் கடைக்கு தனியாக சென்று வருவார். மிகவும் தைரியமானவர். கடைக்கு சென்றவர் காலை 11 மணி வரை வீட்டுக்கு வராமையினால் குடும்பத்தினருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கினேன். இது தொடர்பில் கணவருக்கும் கூறினேன். அவருமே தேடி பார்த்தார் கண்டுபிடிக்கவில்லை.
தைரியமான ஆயிஷாவுக்கு நடந்த கொடுமை
ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தேடிய பின்னர் பொலிஸாரிடம் கூறினோம். அதன் பின்னர் மேற்கொண்ட தேடலின் போது மகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த மகள் மூன்றாவது பிள்ளை. அவர் தனது கடைசி சகோதரி மீது மிகவும் அன்பு கொண்டுள்ளார்.
அடுத்த வருடம் மகள் 6ஆம் வகுப்பிற்கு செல்வதற்காக புத்தகங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தார். அவரே அனைத்தையும் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தார். இனி அவர் ஒரு போதும் மீண்டும் வர மாட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது மகளின் மரணத்திற்கு தனது போதை பொருள் பழக்கமே காரணமாகிவிட்டதென சிறுமியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
போதையால் பறிபோன சிறுமியின் உயிர்
எனது மகளை நான் உரிய முறையில் பார்த்துக் கொள்ளாமையினாலேயே எனது மகளை இழந்து விட்டேன். போதை பொருளுக்கு அடிமையாகி விட்டேன். அதுவே இந்த நிலைமைக்கு காரணமாகிவிட்டது.
இனி இந்த நாட்டில் மாத்திரமல்ல உலகம் முழுவதும் போதை பொருள் இல்லாமல் போய்விட வேண்டும். அது அனைத்தையும் அழித்துவிட்டது.
எனது மகளுக்கு நடந்தது இனி வேறு யாருக்கும் நடந்துவிட கூடாது என தந்தை அக்ரம் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெற்றோரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக அப்பாவி சிறுமியின் உயிர் பறிபோயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.