திருவனந்தபுரம்: கோடை விடுமுறைக்கு பிறகு கேரளாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கேரளாவில் பள்ளிகள் முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. வழக்கமாக எல்லா வருடங்களிலும் ஜூன் 1ம் தேதி முதல் தான் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக மிகவும் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு வழக்கம் போல ஜூன் 1ம் தேதி (நாளை) பள்ளிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கடந்த கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 1 நீங்கலாக அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் மாதம் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. பிளஸ் 1 வகுப்புகள் மிகவும் தாமதமாக தொடங்கியதால் முழு ஆண்டுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறுகிறது. தேர்வு முடிந்த பிறகு ஜூலையில் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கும். பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாகவும், இந்த வருடம் பொதுக்கல்வி நிறுவனங்களில் 42.90 லட்சம் மாணவர்கள் படிக்க உள்ளதாகவும் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறினார். இதற்கிடையே ஓடாமல் இருக்கும் கேரள அரசு பஸ்களை வகுப்பறைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திருவனந்தபுரம் மணக்காட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு ரூ. 4 லட்சம் செலவில் வகுப்பறையாக மாற்றப்பட்ட பஸ் வழங்கப்பட்டு உள்ளது.