கோலாலம்பூர் : கோழி ஏற்றுமதிக்கு மலேஷிய அரசு தடை விதித்துள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இறைச்சி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்துமே பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதில் பெரும்பாலான பொருட்கள் மலேஷியாவின் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மலேஷியாவின் கோழி உற்பத்தி குறையத் துவங்கியதை அடுத்து விலை கடுமையாக உயர்ந்தது. எனவே, உற்பத்தி மற்றும் விலை சீராகும் வரை கோழி ஏற்றுமதிக்கு ஜூன் 1 முதல் தடை விதித்து மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் சமீபத்தில் உத்தரவிட்டார்.சிங்கப்பூரில் கோழியில் செய்யப்படும், ‘சிக்கன் ரைஸ்’ தேசிய உணவாக கருதப்படுகிறது.
அந்நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களிலும் சிக்கன் ரைஸ் பிரபலம். மேலும், மக்களும் தங்கள் அன்றாட உணவில் கோழி இறைச்சியை அதிகம் பயன்படுத்துகின்றனர். மலேஷியாவின் இந்த திடீர் அறிவிப்பால், சிங்கப்பூர் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இறைச்சி கடைகளுக்கு விரைந்து கோழி இறைச்சியை வாங்கி குவிக்க துவங்கி உள்ளனர். இதனால் கோழி இறைச்சி விலை உயர துவங்கி உள்ளது.வரும் நாட்களில் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியின் விலை 30 சதவீதம் வரை உயரக்கூடும் என, கணிக்கப்பட்டு உள்ளது.
Advertisement