புதுடெல்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை வரும் 9ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள சத்யேந்திர ஜெயின், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் கடந்த 2015-16ம் ஆண்டில் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், இதே வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்து விசாரித்தது. இந்நிலையில், சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘சத்யேந்திர ஜெயினை விசாரிக்க 14 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும். சத்யேந்திர ஜெயினை பொருத்தமட்டில் டெல்லி அரசாங்கத்தில் சுகாதாரம், உள்துறை, மின்சாரம், பொதுப்பணித்துறை, தொழில்கள், நகர்ப்புற வளர்ச்சி, வெள்ளம், நீர்பாசனம் மற்றும் நீர் சார்ந்த இலாக்காக்கள் ஆகியவற்றில் அமைச்சராக செயல்பட்டுள்ளார். அதனால் இந்த சட்ட விரோத பண மோசடி எப்படி நடந்தது, இதற்கு யார் யாரெல்லாம் உடந்தையாக செயல்பட்டார்கள் என்பது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. அதனால் தான் 2 வாரம் கேட்கிறோம்’’ என தெரிவித்தார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சந்த்யேந்திர ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஹரன், ‘‘இந்த விவகாரத்தில் 2 முறை சந்தியேந்திர ஜெயின் வீட்டில் சிபிஐ தரப்பில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் முறைகேடு தொடர்பாக ஒரு ஆதாரத்தை கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை. இது முழுமையாக அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்காகும். அதனால் அமலாக்கத்துறைக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது’’ என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சந்தியேந்திர ஜெயினை ஜூன் 9ம் தேதி வரையில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி நேற்று உத்தரவிட்டார்.