பீஜிங் :
மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் சீனா இருக்கிறது. உலக மக்கள்தொகையில் 6-ல் ஒரு பங்கு சீனாவில்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள்தொகை 66 கோடியாக இருந்தது. தற்போது 140 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1959 முதல் 1961-ம் ஆண்டு வரை பஞ்சம் காரணமாக சீன மக்கள்தொகை குறைந்தது. அதன் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு மக்கள்தொகை சரிவுப்பாதையில் செல்ல தொடங்கி உள்ளது.
சீனாவின் தேசிய புள்ளியியல் பிரிவின் கணக்குப்படி, சீன மக்கள்தொகை 141 கோடியே 21 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது, ஓராண்டில் மக்கள்தொகை வெறும் 4 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே அதிகரித்துள்ளது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் மிகவும் குறைவாக வெறும் 0.34 சதவீதமே மக்கள்தொகை உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆண்டொன்றுக்கு மக்கள்தொகை 80 லட்சத்துக்கு மேல் அதிகரிக்கும். எனவே, தற்போதைய வளர்ச்சி மிகவும் குறைவு.
கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைந்ததுதான் இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. 1980-களில், ஒரு பெண்ணுக்கு 2.6 என்ற அடிப்படையில் குழந்தை பிறப்பு விகிதம் இருந்தது. ஆனால் தற்போது 1.15 ஆக குறைந்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 1.6 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு சீனா கைவிட்டது. 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு வரிச்சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் கடந்த ஆண்டு அறிவித்தது.
இருப்பினும், சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் மக்கள்தொகை சரிவடைய தொடங்கி இருப்பதற்கு காரணங்கள் ஆகும். மேலும், 1980-ம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர்.
இதனால், 100 பெண் குழந்தைகளுக்கு 106 ஆண் குழந்தைகள் என்ற விகிதம், 120 ஆண் குழந்தைகளாக உயர்ந்துள்ளது. இதனால், ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு பெண்ணுக்கு 1.5-ல் இருந்து 1.1 ஆக குறையும் என்றும், 2100-ம் ஆண்டு வரை அதே நிலை தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணிபுரியும் வயதினர் மக்கள்தொகை 2100-ம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடும் என்றும், மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அதன் காரணமாக சீன பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.