சென்னை:
கேரளாவில் தற்போது ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் சாக்கடையில் உருவாகும் கொசுக்கள் மூலம் பரவுகிறது. இதையடுத்து வெஸ்ட்நைல் வைரஸ் காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‘கியூவெக்ஸ்’ என்ற வகை கொசுக்கள் மூலம் வெஸ்ட்நைல் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இந்த காய்ச்சலுக்கு உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நரம்பு சார்பான பிரச்சினை ஏற்படும். சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரக்கூடியவை. ஆனால் வெஸ்ட்நைல் வைரஸ் காய்ச்சலை பரப்பும் ‘கியூவெக்ஸ்’ கொசுக்கள் அசுத்தமான சாக்கடை நீரில் வளரும் தன்மை கொண்டது.
தற்போது கேரளாவில் வெஸ்ட்நைல் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கேரள மாநிலம் திருச்சூரில் இந்த காய்ச்சலுக்கு 47 வயது கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எனவே தமிழகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதன்படி அனைத்து மருத்துவமனைகளிலும் வெஸ்ட்நைல் வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களின் விவரங்களை சேகரித்து பொது சுகாதாரத்துறைக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவுநீர் தேங்காமல் தூய்மையாக வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கழிவுநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.