Stalin speech after visiting delta drain works: டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டே காவிரி வரத்து வாரிகளை தூர்வாரி தண்ணீர் தங்கு தடையின்றி செய்ய ஏற்பாடு செய்ததால், மகசூல் பெருகியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் இந்த ஆண்டில் பருவமழைக்கு முன்பே 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நீர் நிலை தூர் வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து நீர்வழித் தடங்களிலும் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. வடகிழக்கு பருவமழையின் போது சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்காமல் காக்கப்படும். கரூரில் -19, திருச்சியில் – 90, நாகப்பட்டினத்தில் – 30, பெரம்பலூர் – 40, அரியலூரில் – 16, புதுக்கோட்டையில் – 20, தஞ்சாவூரில் – 170, திருவாரூரில் – 115, மயிலாடுதுறையில் – 49 கடலூரில் – 134 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படுகிறது. மகசூலை பெருக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். நடப்பாண்டில் 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது, என கூறினார்.
இதையும் படியுங்கள்: குரங்கு அம்மை; விமான பயணிகளை கண்காணிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவு
பின்னர் தமிழகத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்துக்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது, ”மக்களிடம் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருக்கிறார். தி.மு.க அரசு பொறுப்பேற்றப்பிறகு கலவரம், சாதி, மத சண்டைகள், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், கூட்டு வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை. தமிழகத்தில் குற்றச்செயல்களால் குறைந்துள்ளதால் தான் முதலீடுகள் குவிந்து வருகின்றன. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதற்கு இதுவே சாட்சி”, என்று கூறினார்.