கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். தொழிலதிபரான இவர் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் மனைவி காயத்திரி தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்.
இந்தத் தம்பதிக்கு மூன்றரை வயதில் வில்மா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் இருக்கும் தம்பதி, ’வில்மா சாதி, மதம் சாராதவர்’ என்ற சான்றிதழை வருவாய்த்துறையில் வாங்கியுள்ளனர்.
இதுகுறித்து நரேஷ் கார்த்தக் கூறுகையில், “சாதி இல்லாத சமுதாயம் வேண்டும் என்பதை நான் மட்டும் சொல்லவில்லை. சாதியை ஒழிக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பள்ளிகளில்தான் முதலில் சாதி குறித்துக் கேட்கப்படுகிறது. அதை மாற்றினால் சாதி ஒழிந்துவிடாதுதான்.
என்றாலும், சாதி இல்லாத சமுதாயத்துக்கான முதல் படியாக, எங்கள் முயற்சியைப் பார்க்கிறேன்.
இடஒதுக்கீடு மிகவும் முக்கியம். அதை கூடாது என்று சொல்லும் ஆள் நான் இல்லை. இட ஒதுக்கீடு இருப்பதால்தான், ஒடுக்கப்பட்ட மக்கள் பலர் மேலே வருகின்றனர். சலுகைகள் இருப்பதால்தான் தங்கள் குழந்தைகளை படிக்கவே அனுப்புகின்றனர். அது இல்லாவிடின் அந்த மக்கள் பள்ளிக்குச் செல்வதே சிரமமாகிவிடும்.
பாரதியார், காந்தி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் சாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அது கோடிக்கணக்கான மக்களின் கனவு. பிறப்பால் ஏற்றத் தாழ்வு சொல்வதில், எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.
அடிப்படை அறிவு, பகுத்தறிவு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கும் பள்ளிக்குள், எங்கள் குழந்தை சாதி, மத அடையாளத்துடன் செல்ல வேண்டாம் என்று நினைத்தோம். குழந்தை சம்பந்தப்பட்ட விஷயத்தில் நான் மட்டும் தனித்து இந்த முடிவை எடுக்கவில்லை. நான், என் மனைவி இருவரும் இணைந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
சிலர் நானும், என் மனைவியும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அதனால்தான் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் எடுத்திருப்பார்கள் என்று கூட கூறலாம். பிறப்பால் எந்த மதம் ஒட்டப்பட்டதோ, இருவரும் ஒரே மதத்தில் வளர்ந்தவர்கள்தான்.
எங்களுக்கு மத கோட்பாட்டில் உடன்பாடு இல்லை. அவ்வளவுதான். திருக்குறள், அம்பேத்கர், பாரதியார் கோட்பாடுகளை எடுத்து வளர்ந்தவன் நான். கல்வி நிறுவனங்களில் சாதி அடையாளங்களை குறிப்பிட வேண்டிய கட்டாயமில்லை என்று 1972 அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அது குறித்து அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், மக்கள் என யாரிடமும் விழிப்புணர்வு இல்லை. என் மகளை ஒரு பள்ளியில்தான் சேர்க்க முடியும் என்றாலும், பள்ளிகளின் இந்த பார்வை குறித்து தெரிந்து கொள்ள நிறைய பள்ளிகளில் விண்ணப்பம் வாங்கினோம். அங்கெல்லாம் ’சாதி இல்லை’ என்று ஒரு பிரிவே இல்லை என்றனர்.
‘1,500 குழந்தைகள் படிக்கும் இடத்தில், உங்கள் ஒரு குழந்தைக்காக தனியாக செயல்பட முடியுமா?’ என்று கேட்கின்றனர். கல்வி நிறுவனங்களில் விண்ணப்பம் உள்ளிட்ட சான்றிதழ்களில் ’சாதி இல்லை’ என்கிற பிரிவை ஏற்படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறேன்.
அவர் அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார். மேலும் 1972 அரசாணையை மீண்டும் சுற்றறிக்கையாக கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்’’ என்றார்.