தாமிரபரணி கூட்டுகுடி நீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாவதை தடுக்க கோரி சாலையில் தேங்கிய நீரில் இரு இளைஞர்கள் துணி துவைத்து குளித்து ஓட்டையை அடைக்க நூதனமாக வலியுறுத்தி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை – சங்கரண்கோவில் இடையே அமைந்துள்ளது சேர்ந்தமரம் கிராமம், இந்த கிராமத்தின் வழியாக வாசுதேவ நல்லூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு தாமிரபரணி கூட்டுகுடி நீர் திட்ட குழாய் செல்கிறது.
இந்த குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடி தண்ணீர் வீணாகி சேர்ந்தமரம் கிராம சாலையில் வீணாக தேங்கி நிற்கிறது .
இது தொடர்பாக சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட பின்னரும் குழாய் உடைப்பை சரி செய்ய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகின்றது.
இதனை அதிகாரிகளுக்கு உரைக்கும் படி உணர்த்த நினைத்த இரு இளைஞர்கள், கடையில் சோப்பு வாங்கி வந்து சாலையில் வீணாகி தேங்கிய குடி நீரில் துணி துவைத்தும், குளித்து நீச்சல் அடித்தும் குழாய் உடைப்பை சரி செய்ய வலியுறுத்தி கோரிக்கை வைத்ததோடு, இந்த வீடியோவை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் எடுத்துச்சென்றனர்.
மக்களின் தாகம் தீர்க்கும் குடி நீர் விணாவதை கண்டு பொறுக்க முடியாமல், பொங்கி எழுந்து வீடியோ பதிவிட்ட இரு இளைஞர்களும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
தாமிரபரணி கூட்டு குடி நீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைந்து சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.