சென்னையில் விதிமீறல் கட்டுமான திட்டங்கள் குறித்து சி.எம்.டி.ஏ., அறிவிப்பு…

சென்னை: சென்னையில் விதிமீறல் ஈடுபட்டுள்ள கட்டுமான திட்டங்கள் குறித்த சி.எம்.டி.ஏ., அறிவிப்பு வெளியிட்ட உள்ளது. புதிதாக  வீடு வாங்குவோர் நலன் கருதி, அதிகபட்ச விதிமீறல்கள் உள்ளதாக கண்டறியப்பட்ட கட்டுமான திட்டங்களின் பட்டியலை சி.எம்.டி.ஏ வெளியிட்டிருப் பதாக தெரிவித்து உள்ளது.

சென்னை பெருநகரில் விதிமீறல் கட்டடங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றமும் அவ்வப்போது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு, விதிமீறல் கட்டிடங்களை அகற்றாமல், அதற்கான அபராதம் மட்டுமே வசூலித்து வருகின்றனர். இதனால், விதிமீறல் நடவடிக்கைளை அதிகரித்து வருகின்றனர்.

சமீபதில், விதிமீறல் கட்டிடங்கள் மீதான நீதிமன்ற உத்தரவை  மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிப்பதே பிரதானமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  விதிமீறல் கட்டிடங்கள் மீதான  மனுக்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்குகளில், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத  அதிகாரிகளின்  செயலுக்கு அபராதம் விதிப்பது இரண்டாவது பட்சமாக தான் இருக்க வேண்டும். சிறை தண்டனை விதிப்பதுதான் பிரதானமாக இருக்க வேண்டும். இதுபோன்ற அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் நியமிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததுடன்,  இதுவரை நீதிமன்ற  உத்தரவுகள் மூலம் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தமிழக நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது ஐஏஎஸ் பதவியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் மட்டத்தில் இருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும். அரசிடம் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பதவியில் நியமிக்கப்படும் அதிகாரிகள், தங்களது பதவியை லஞ்சப் பணம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என்று நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்த பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சேர்த்த சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து,  2021 மே முதல் 2022 ஏப்ரல்,  வரையிலான காலத்தில் ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்கள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ள, சிஎம்டிஏ  உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 396 கட்டுமான திட்டங்களை ஆய்வு செய்தனர். இதில், ஏழு திட்டங்கள் பணிகளை முடித்து, பணி நிறைவு சான்றும் பெற்றுவிட்டன. 112 கட்டுமான திட்டங்களில், இன்னும் பணிகள் துவக்கப்படவில்லை. பணிகள் நடந்து வருவதில், 16கட்டுமான திட்டங்களில், ஆரம்ப நிலையிலேயே விதிமீறல்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இதில், அதிகபட்ச விதிமீறல் உள்ள ஐந்து கட்டுமான திட்டங்களின் விபரங்கள், பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. புதிதாக வீடு வாங்குவோர் உள்ளிட்ட பொதுமக்களின் கவனத்திற்காக இந்த பட்டியல் வெளியிடப்படுவதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்த விரிவான விபரங்களை அறிய பொதுமக்கள் சிஎம்டிஏ அலுவலகத்தை நாடலாம்.

மேலும் விவரங்களுக்கு http://www.cmdachennai.gov.in/tamil/index.html இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.