தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி., இழப்பீடு நிலுவைத் தொகை 9,602 கோடி ரூபாயை விடுவித்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மாநில அரசுகளால், பல்வேறு பெயர்களில் வரிகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றை மாற்றி, ஜி.எஸ்.டி., எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரி என்ற பெயரில், ஒரே வரி விதிப்பை மத்திய அரசு செய்து வருகிறது.இதனால், ஏற்பட்ட இழப்புகளால் மாநில அரசுகளின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது.
இதை சரி செய்ய, மத்திய அரசு ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதை வழங்குவதில், பல்வேறு நேரங்களில் தாமதம் ஏற்பட்டது. தமிழகத்திற்கு மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி இருந்தது.இதில், கணிசமான தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீதியையும் தரும்படி, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரி வந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் டில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது இந்த கோரிக்கையை வைத்தார்.
சமீபத்தில் பிரதமர் சென்னைக்கு வந்திருந்தபோதும் ஸ்டாலின் இந்த கோரிக்கையை வைத்தார். மேலும் ‘இழப்பீடு போதுமானதாக இல்லை; இழப்பீட்டுக்கான காலக்கெடுவை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்நிலையில், 2022 மே 21ம் தேதி வரை வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகை முழுவதையும் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.அதன்படி, நாடு முழுதும் 21 மாநிலங்களுக்கு, மொத்தம் 86 ஆயிரத்து 912 கோடி ரூபாய் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி., இழப்பீடு நிலுவைத் தொகையாக, 9, 602 கோடி ரூபாயும், புதுச்சேரிக்கு 576 கோடி ரூபாயும் விடுவிக்கப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு விடுவிக்கப்பட்டதன் மூலம், தற்போது வரையில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகை எதுவும் பாக்கி இல்லை என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இருப்பினும், ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டுமென்ற மாநிலங்களின் கோரிக்கை பற்றி மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement