ஜேர்மன் குடியுரிமைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் வெளிநாட்டவர்கள்: ஓரளவு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி



ஜேர்மனியின் புதிய கூட்டணி அரசு, ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், FDP கட்சியின் புலம்பெயர்தல் கொள்கை நிபுணரான Dr. Ann-Veruschka Jurischஇடம், அது குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன.

குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் எப்போது கொண்டு வரப்படும் என்பது முதலான சில விடயங்கள் குறித்து அவர் கூறிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் வாழ்வோரில் சுமார் 14 சதவிகிதம்பேர் வெளிநாட்டு பாஸ்போர்ட் ஒன்றைத்தான் வைத்திருக்கிறார்கள். அதாவது, 11.8 மில்லியன் பேர்…

அவர்களில் ஒரு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள். அவர்கள் ஜேர்மானிய குடிமக்களானபோது அவர்கள் தங்கள் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துக்கொள்ள அவர்களால் முடிந்தது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறவேண்டுமானால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டைக் கைவிட முன்வரவேண்டும்.

ஆகவே, பலர் தங்கள் சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டை இழக்க மனமில்லாததால் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஜேர்மன் குடியுரிமை கிடைத்தாலும் தங்கள் சொந்த பாஸ்போர்ட்டையும் வைத்துக்கொள்ளலாம் என்ற நிலை வருவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

சரி, இந்த குடியுரிமைச் சட்டங்கள் நவீனப்படுத்தப்படப்போவது எப்போது?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த Jurish, கூட்டணிக் கட்சிகளுக்குள் அது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துவருவதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிவாக்கில் குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டாலும், குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் உண்மையாகவே இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரக்கூடும் என தோன்றுகிறது.

குடியுரிமைச் சட்டம் ஒன்று புதிதாக இயற்றப்படுவதற்கு முன், அதிலுள்ள சின்னச் சின்ன விடயங்களை கவனிக்கவேண்டியுள்ளது.

குறிப்பாக, பல தலைமுறைகளுக்கு மக்கள் பல நாட்டு பாஸ்போர்ட்டுகள் வைத்திருக்கும் நிலைமையை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் FDP உறுதியாக உள்ளது.

அதாவது, உதாரணமாக, முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோரும் அவர்களுடைய பிள்ளைகளும் இரட்டைக் குடியுரிமை கோரலாம். ஆனால், அவர்களுடைய பேரப்பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளுமோ, அவர்கள் தங்கள் தாத்தா பாட்டியின் குடியுரிமையை வைத்துக்கொள்ள விரும்புகிறார்களா, அல்லது அவர்களுக்கு ஜேர்மன் குடியுரிமை வேண்டுமா? இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் என்ற கேள்விக்குட்படுத்தப்படுவார்கள்.

இதுபோக, மொழித்தேவைகளில் சில சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மிகப்பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. அத்தனை பேருக்கும் குடியுரிமை வழங்கவேண்டுமானால், குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கே மிக நீண்ட காலம் தேவைப்படுகிறது.

ஆக, உத்தேசமாக 2023இல் சட்ட மாற்றங்கள் வந்தாலும், நடைமுறையில், வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற சிறிது காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.