தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்து அறிவித்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. தொடர்ந்து, மாநில அரசுகளும் உள்ளூர் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.
ஆனால், மத்திய அரசு இதுவரை பலமுறை உயர்த்திவிட்டு தற்போது அதில் 50% மட்டும் குறைத்து, மாநிலங்களைக் குறைக்கச் சொன்னால் எப்படி செய்ய முடியும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசைக் கண்டித்து, இன்று கோட்டையை நோக்கி பேரணி நடைபெறும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று, எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.
பாஜவினரின் பேரணியையொட்டி, தலைமை செயலகத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
அப்போது அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் கடந்த 3 நாட்களாக, பட்டத்து இளவரசரை(உதயநிதி) அமைச்சராக்க, ஒவ்வொரு மாவட்டமாக சென்று தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். அதேநேரம் மோடி, கொரோனாவால் பெற்றோரை இழந்து தவித்த குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்க்கும் போது எட்டு ஆண்டுகள் சாதனை செய்திருக்கக் கூடிய மோடி அரசுக்கும், ஒராண்டிலேயே வேதனைகளைக் கொடுத்திருக்க கூடிய மு.க.ஸ்டாலினுக்கும் உள்ள வேறுபாடு தெரியும்.
நாம் கோட்டையை முற்றுகையிட போகிறோம் என்பது தெரிந்த உடனே, முதலமைச்சர் இங்கிருந்து எஸ்கேப் ஆகி டெல்டா பகுதிக்கு சென்று விட்டார். அவர் எங்கு சென்றாலும் பாஜக விடப்போவது கிடையாது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கிறோம் என சத்தியம் செய்துதான் திமுக ஆட்சி வந்தது. நீங்கள் சொன்னதை ஏன் செய்யவில்லை என்பதற்காகத் தான் இந்த ஆர்ப்பாட்டம்.
இந்த விடியாத அரசின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் 2 வருடங்கள் இதை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இது தன்னுடைய ஆட்சி என்று நினைத்துக் கொண்டு, பாரத பிரதமரை மேடையில் அமரவைத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதை கேட்பதற்கு யாரும் இங்கே தயாராக இல்லை.
கட்சத் தீவை கனவில் கூட திமுகவால் மீட்க முடியாது. அதை மீட்பதற்கு உங்களுக்கு அருகதை கிடையாது. பிரதமர் மோடிக்கு அதை எப்படி இங்கு கொண்டு வருவது என்பது தெரியும். மோடி, முன் முதல்வர் பேசிய அனைத்து தகவல்களும் தப்பானவை. இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் எழுச்சி.
தமிழக அரசு இன்னும் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் மாவட்டம்தோறும் அறப்போரட்டம் நடத்துவோம். திமுக வின் அழிவு காலம் ஆரம்பித்துவிட்டது. போட்டி திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான். இறுதியில் எப்படியும் பாஜக தான் வெல்லும். பாஜக தொண்டர்கள் கைதுக்கும் போராட்டங்களுக்கும் தயாராக இருங்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“