சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மே 31-ம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
ஜூன் 1, 2, 3-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும்.
மே 30-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 6 செ.மீ., திருச்சி, புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, களியல் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் 31-ம் தேதி (இன்று) 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.