சென்னை:
உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது, இதையொட்டி நாடு முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 33 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
மேரி அன்னே அறக்கட்டளை மற்றும் தி யூனியன் அமைப்பு நடத்திய ஆய்வில் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் 8 ஆயிரம் டன் புகையிலை கழிவுகள் வெளியாவது தெரிய வந்துள்ளது.
இதில் சிகரெட் கழிவுகள் 4,039 டன், பீடி கழிவுகள் 606 டன் ஆகும். மற்றவை புகையில்லா புகையிலை கழிவுகளாகும்.
தமிழ்நாட்டில் வசிப்பவர்களில் 20 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துகிறார்கள். 6.3 சதவீதம் பேர் சிகரெட் குடிப்பவர்கள். பீடி புகைப்பவர்கள் 5.4 சதவீதம் பேர் ஆகும்.
ஆய்வு மையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
புகையிலை பயன்பாடு உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி தயாரிப்பு கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. புகையிலை பொருட்களை பேக்கேஜிங் செய்வதில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பது எங்களது பரிந்துரையாகும். கழிவு பொருட்களை அகற்ற உற்பத்தி நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும். அல்லது கழிவுகளை அகற்ற அரசு பணம் வசூலிக்க வேண்டும்.