தமிழ் வழி கல்வியில் பள்ளிப் படிப்பு – 24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய தஞ்சை மாணவி

மைக்கேல்பட்டியை சேர்ந்த ரெனிட்டா என்ற இளம்பெண், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மைக்கேல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ரவி – விக்டோரியா தம்பதியினரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா. இவர், மைக்கேல்பட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்துள்ளார். 10-ம் வகுப்பில் 500-க்கு 490 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1200-க்கு 1158 மதிப்பெண்களும் பெற்று உள்ளார். தமிழ்வழி கல்வியில் பள்ளி படிப்பை முடித்த ரெனிட்டா, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கிற லட்சிய நோக்கில் பயணம் செய்துள்ளார்.
image
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் நீர்பாசன பொறியியல் படித்த ரெனிட்டா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சிறு வயதில் வேளாங்கண்ணிக்கு குடும்பத்தினருடன் சென்ற ரெனிட்டா சுனாமி பாதிப்பை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து, அரசுப் பணியில் இருந்தால் உதவி செய்யலாம் என்ற எண்ணம் தான் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்ற தூண்டுகோலாக இருந்தது என்று ரெனிட்டா கூறியுள்ளார்.
இந்நிலையில், 24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று 338-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் ரெனிட்டா. இதுபற்றி அவர் கூறும்போது பெண்கள் வீட்டில் முடங்கி இருக்க கூடாது என்றும், வெளி உலகுக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிபெற்ற ரெனிட்டாவுக்கு, ஊர்மக்கள் திரண்டு வந்து இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
image
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான, 749 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற்றன. முதன்மை எழுத்துத் தேர்வு, பிரதான எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையளத்தில் நேற்று வெளியிட்டது. இதில் தேர்வெழுதியவர்களில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.