திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக மேட்டுபட்டியைச் சேர்ந்த சுரேஷ் பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பா.ஜ.க ஆதரவு செய்திகளையும், தி.மு.க அரசுக்கு எதிராக வரும் கருத்துகளையும் பகிர்ந்துவந்திருக்கிறார்.
இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள நண்பர்களாக உள்ள சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி உள்ளிட்டோர் தி.மு.க அரசுக்கு எதிராகவும், பா.ஜ.க ஆதரவு செய்திகள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்தால் அதை இவருடைய பக்கத்தில் ஷேர் செய்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.
காவல்துறையில் பணிசெய்துகொண்டு சமூக வலைதளங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாகவும், தமிழக அரசை விமர்சனம் செய்யும் வகையில் பிறர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்ததால் அவரை மே 29-ம் தேதி பணியிடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவிட்டிருக்கிறார்.
இதற்கிடையே தலைமைக் காவலர் சுரேஷ் ஃபேஸ்புக் பக்கத்தில் நண்பர்களாக உள்ள சிவசேனா கட்சி மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி, பிரபல ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட ஆறு பேரை போலீஸார் விசாரணைக்கு அழைத்திருக்கின்றனர். இன்று புறநகர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைவரும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி, “போலீஸார் சுரேஷ் தனது முகநூல் பக்கத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் பதிவிட்டது தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் தற்போது என்ன காரணத்துக்காகவோ எங்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் `இதைப் பெரிதாக்க வேண்டாம் இது சம்பந்தமாக செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்க வேண்டாம்’ எனக் கூறி அனுப்பிவிட்டனர்.
பிரதமர் மோடி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பற்றி சமூக வலைதளங்களில் தேசபக்தியுடன் வெளியிடப்பட்ட கருத்துகளை, பதிவுகளை எடுத்து சுரேஷ் ஷேர் மட்டும் செய்திருக்கிறார். அவரைப் பணியிடை நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு பற்றியும், பிரதமர் மோடி பற்றியும், அண்ணாமலை பற்றியும் அருவருக்கத்தக்க பல்வேறு கருத்துகளை தி.மு.க-வினர் பரப்பிவருகின்றனர். அவ்வாறு சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்தால் தி.மு.க கட்சியை தடைசெய்ய வேண்டியது வரும். கட்சிமீது விமர்சனம் வரத்தான் செய்யும், அதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. எனவே, தேசிய உணர்வுடன் வேறு சிலர் பகிர்ந்த கருத்துகளையும், வீடியோக்களையும் எடுத்து தனது முகநூலில் ஷேர் செய்த காவலர் சுரேஷுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்” என்று கூறினார்.
சமூக வலைதள முகநூல் பக்கத்தில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக கருத்துகளைப் பரப்பியதாக காவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.