திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை வெளிப்படுத்த டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் – ஜெயலலிதா பேரவை தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்ட திமுக அரசின் உண்மை நிலையை அம்பலப்படுத்த கிராமம்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா பேரவை பயிற்சி முகாமில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவையின் மாவட்டச் செயலாளர்களுக்கான 2 நாள் செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. ஜெயலலிதா பேரவையின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் நடந்த இந்தபயிற்சி முகாமை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் அவர்கள் பேசியதாவது:

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: இன்று தேர்தல் நடந்தால் திமுக 10 இடத்தில்கூட வெற்றிபெறாது என மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் கூறியுள்ளது. இனிவரும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெறும் நிலையை உருவாக்க வேண்டும்.

இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுக நடவடிக்கை எடுத்ததுபோல திமுக நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த தேர்தலில் மக்களுக்கு நம் மீது கோபமோ, எதிர்ப்போ இல்லை. நம் உழைப்பு குறைந்ததால் கடந்த தேர்தலில் தோற்று எதிர்க்கட்சி ஆகிவிட்டோம். இன்று அரசு ஊழியர்கள்கூட தவறு செய்துவிட்டோமோ என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர். ஓராண்டு காலத்திலேயே திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகி விட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த முகாமில், பழனிசாமி தலைமையிலான 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கப் புத்தகம் வெளியிடப்பட்டது. அதிமுகவின் சாதனைகள், திமுக ஆட்சியின் திராவிட மாடலின் உண்மை நிலை, திராவிட இயக்கம் எப்படி தமிழகத்தை வளர்த்தது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

தீர்மானம் நிறைவேற்றம்

பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

ஜெயலலிதா பேரவை சார்பில் மாதம்தோறும் ஒரு முறையாவது கிராம, பேரூர், நகர, மாநகரங்களில் கூட்டம் நடத்தி, அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட வரலாற்று சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும். அத்துடன், அதிமுக அரசின் சாதனை திட்டங்களை முடக்கிவைத்து வறண்ட தமிழகமாகவும், மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருண்ட தமிழகமாகவும், அமைதி பூங்காவாக இருந்ததமிழகத்தில் சட்டம் – ஒழுங்கைபாழ்படுத்தி மிரண்ட தமிழகமாகவும் உருவாக்கிய மக்கள் விரோத திமுக அரசின் உண்மை நிலையை அம்பலப்படுத்த கிராமம்தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.