ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதை அடுத்து, காஷ்மீர் பண்டிட்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஜம்மு பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தில் கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்தவர் ரஜினி பாலா. இவர் கோபால்போராவிலுள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் ரஜினி பாலா பள்ளியில் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த தீவிரவாதிகள், அந்த ஆசிரியை மீது துப்பாக்கிச் சூடுநடத்தினர். இதனால் உடல் முழுவதும் காயமடைந்த ஆசிரியை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்தார்.
இந்தச் சம்பவம் காஷ்மீர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ஸ்ரீநகரில் திரண்ட காஷ்மீர் பண்டிட்கள் சாலையில் அமர்ந்து ஆசிரியையின் கொலைக்கு நீதி கேட்டும், பள்ளத்தாக்கு பகுதியில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் இருந்து மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியும் போராட்டம் நடத்தினர்.
“எங்களுக்கு நீதிவேண்டும். இந்த திட்டமிட்ட தாக்குதல்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியையின் உறவினர் தெரிவித்தார்.
கடந்த ஐந்து மாதங்களில் ஜம்மு – காஷ்மீர் பகுதிகளில் 26 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தீவிரவாதிகளால் குறிவைத்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஸ்ரீநகரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியை ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.