சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டுள்ள தூர்வாரும் பணிகளின் மூலம் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகிறார். இரண்டாவது நாளான இன்று (மே 31) நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின் முக்கிய அம்சங்கள்:
> காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வாருவதற்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.
> அதன் அடிப்படையில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு 683 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 916 இயந்திரங்களை கொண்டு அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
> இப்பணிகளை தற்போது பணிபுரியும் செயற்பொறியாளர்களோடு கூடுதலாக பிறவட்டம் மற்றும் கோட்டங்களிலிருந்து பொறியாளர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
> தூர்வாரும் பணிகள் நடைபெற்ற பாசன பகுதிகளில் தினந்தோறும் பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு பணிக்கும் விவசாய பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர், உதவி மேலாண்மை அலுவலர், பஞ்சாயத்து செயலர் மற்றும் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் அடங்கிய உழவர் குழு அமைக்கப்பட்டு பணிகள் செவ்வனே முடிக்கப்பட்டன.
> தூர்வாரும் பணிகள் சீரிய முறையில் நடைபெற தமிழக அரசின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் நியமிக்கப்பட்டு 100 சதவீத பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
> இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் விரைவில் கடைமடை வரை பாசனத்திற்கு சென்றடைய உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பணிகளால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
> மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு வழக்கமான தண்ணீர் திறக்கும் நாளான ஜுன் 12 ஆம் தேதிக்கு முன்னதாக முதல்முறையாக மே 24-ல் குறுவை பாசனத்திற்காக தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து வைத்தார்.
> காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளும் தமிழக அரசின் வாயிலாக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட குறுவையில் 5.20 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
> சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முன்கூட்டியே துவக்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் காக்கப்படுவதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்வதால் கோடை பயிர் வகைகள், அதிக அளவில் சாகுபடி செய்ய இயலும். இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
> நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கருவேலங்கடை மற்றும் கல்லார் கிராமம், கல்லார் வடிகாலில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 3.50 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
> இதனால் சுமார் 1500 ஏக்கர் வடிகால் வசதி பெறும். மேலும், இதன்மூலம் கருவேலங்கடை, குறிச்சி ஆகிய கிராமங்கள் பயன்பெறுகின்றன.
> அதனைத் தொடர்ந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
> மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டம், அனந்தமங்கலம் கிராமத்தில், உருளும் விதைப்பு கருவி மூலம் நேரடி நெல் விதைப்பு செய்யும் பணியினை தமிழக முதல்வர் பார்வையிட்டார்.
> விவசாயிகள் நேரடி நெல் விதைப்பின் மூலம் நெல் சாகுபடி மேற்கொள்வதால் விதையளவு குறைவதுடன், நாற்றாங்கால் செலவு மற்றும் நடவு செலவு குறைந்து, அறுவடையும் 10 முதல் 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிய வாய்ப்புள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னரே குறுவை நெல் அறுவை பணிகள் முடிவடைந்துவிடும். மேலும், நல்லாடை கிராமத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணியினை முதல்வர் பார்வையிட்டார்.
> மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் கிராமம், ராமச்சந்திரன் வாய்க்காலில் ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் 5.60 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
> மஞ்சளாற்றில் வலது கரையில் 138.800 கிலோ மீட்டரில் இருந்து பிரியும் மஞ்ச வாய்க்காலின் பிரிவு வாய்க்காலான சேர்வாரி வாய்க்காலின் வலது கரையில் 1.50 கி.மீட்டரில் ராமச்சந்திரன் வாய்க்காலானது பிரிந்து 5.60 கி.மீ வரை செல்கிறது. இது சுமார் 365 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளிக்கிறது. இந்த வாய்க்காலின் முழுநீர் அளவு 52 கன அடி ஆகும்.
> ராமச்சந்திரன் வாய்க்கால் தொலைதூரம் 5.60 கி.மீ வரை திட்டுகளும், காட்டாமணக்கு, கோரை போன்ற செடிகளும் முளைத்து தண்ணீர் செல்லும் பாதை அடைத்துள்ள நிலையில், பாசன காலங்களிலும், வெள்ள காலங்களிலும் தண்ணீர் கடைமடை வரைசென்று சேர்வதற்கும், வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. இதனால் சுமார் 365 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், இதன்மூலம் திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர் ஆகிய கிராமங்கள் பயன்பெறுகின்றன.
> திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கொத்தங்குடி கிராமம், கொத்தங்குடி வாய்க்காலில் ரூ.9.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனால் சுமார் 232 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், இதன்மூலம் கொத்தங்குடி, கடுவங்குடி ஆகிய கிராமங்கள் பயன்பெறுகின்றன.
> திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பேரளம் கிராமம், பேரளம் வாய்க்காலில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் 4 கிமீ, நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனால் சுமார் 177 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், இதன்மூலம் பேரளம் மற்றும் வீராநத்தம் கிராமங்கள் பயன்பெறுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.