எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சரிவர தேர்வு எழுதவில்லை என்ற மன உளைச்சலில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சரஸ்வதி நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா பாண்டி என்பவரது மகள் யோகேஸ்வரி. இவர் இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார், நேற்று பள்ளியில் சமூக அறிவியல் பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வில் சரியாக எழுதவில்லை என வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த யோகேஸ்வரி, இரவு 8 மணியளவில் அவரது தாய் செல்லம்மாள் பக்கத்து வீட்டிற்கு சென்றபோது பெட்ரூமில் கதவை சாத்திக்கொண்டு மின்விசிறியில் சேலையை மாட்டி தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
இதையடுத்து அவரது தாயார் செல்லம்மாள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் அறைக் கதவை உடைத்து யோகேஸ்வரியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரிட்சை சரியாக எழுதாத மன உளைச்சலில் பள்ளி மாணவி தற்கொலை செய்து இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“