டெல்லி: கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் பல நாட்கள் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழக்கம் போல் பொதுமக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதாகவும், அதனால் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்தாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘center for research on energy and clean air’ என்ற அமைப்பின் அறிக்கையின் படி நாடு முழுவதும் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களிலும் 2.7 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், அனல் மின் நிலையங்களுடன் இணைந்துள்ள நிலக்கரி சுரங்கங்களின் கிடங்குகளில் 1.35 கோடி டன் நிலக்கரி இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் நாட்டின் ஒட்டுமொத்த மின் தேவையானது அதிகபட்சமாக 2.14 லட்சம் வாட் ஆக இருக்கும் என்றும், ஏப்ரல், மே மாதங்களில் இருந்த சராசரி மின் தேவையும் ஆகஸ்ட் மாதம் அதிகரித்து 1,33,00,426 மில்லியன் யூனிட்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மின் உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நிலக்கரின் பற்றாக்குறை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. மின் பற்றாக்குறை அதிகரிக்க காரணம்: மின்சாரத்துறையில் நிலக்கரி அதிகரித்துவருவதற்கு ஏற்ப மின் உற்பத்தி நிலையங்கள் பொதிய அளவில் நிலக்கரி இருப்பை வைத்துக்கொள்வதில்லை. போதுமான அளவில் சுரங்கங்களில் நிலக்கரி இருந்தும் தேவையான அளவு நிலக்கரி உற்பத்தியை அரசு அதிகரிக்கவில்லை என ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒரு ஆண்டுக்கு 150 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. அனால் அதில் பாதி அளவான 75 கோடி டன் மட்டுமே நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோக அமைப்பில் பரவலாக காணப்படும் சரியாக திட்டமிடாததும், நிர்வாக திறமையின்மையுமே காரணம் என கூறப்படுகிறது. மேலும் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா கால பொது முடக்கத்தால் மின் தேவை கணிசமாக குறைந்ததால் , நிலக்கரி உற்பத்தியும் பெருமளவு குறைக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் சரிவர பழுது பார்த்து பராமரிக்கப்படவில்லை. நிலக்கரியை அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு சென்ற ரயில்வே வேகன்களும் பிற பணிகளுக்கு திருப்பி விடப்பட்டன. இப்போது சில மாதங்களாக இயல்பு நிலைக்கு நாடு திரும்பிய உடன் அதிகரித்த மின் தேவைக்கு ஏற்ப நிலக்கரியை உடனடியாக வழங்க இயலாத நிலையில் இந்திய நிலக்கரித்துறை உள்ளது. எனவே இனியும் தாமதிக்காமல் தென்மேற்கு பருவமழை அதிகரிக்கும் முன்பாக போர் கால அடிப்படையில் நிலக்கரி உற்பத்தியை விரிவுபடுத்த, அனல் மின் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படவேண்டும். அத்துடன் மாநில அரசின் மின் உற்பத்தி நிலையங்கள், தனியார் மின் நிலையங்கள் நடப்பாண்டில் அதிகஅளவு நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய விரைவில் அனுமதி வழங்க வேண்டும்.