‘நிலக்கரி கையிருப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம்’ – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தை விட குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு குறைவாகவே உள்ளது என்றும், அதை மறந்து, மறைத்து எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன என்றும் கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், புதுக்கோட்டையில் மின் இணைப்பு வேண்டி நூதனப் போராட்டம் குறித்த கேள்விக்கு, சம்பந்தப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கும் வழியில், மின் கம்பம் பொருத்துவதில் இரண்டு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு உள்ளது எனவும், இரு தரப்பினரிடம் சுமூக உடன்படிக்கை ஏற்பட்ட பின் அது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது, “தமிழகம் உட்பட ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் வினியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
image
தமிழகத்தில் 6 முதல் 7 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஆனால் அதை விட குறைவாகவே குஜராத்தில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரி கையிருப்பு குறித்து தமிழகத்தை குறைகூறும் இயக்கங்கள், தான் ஆளக்கூடிய மாநிலங்களில் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது? அங்கெல்லாம் மின்வெட்டு எவ்வளவு நேரம் உள்ளது? மின் வினியோகம் எவ்வளவு நேரம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை மறந்து, மறைத்து பேசி வருகின்றனர். பொய் பிரச்சாரம் மக்களிடத்தில் எடுபடாது. தமிழகத்தில் தற்போது காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.