கேரளாவுக்கு முறைகேடாக கனிமவளங்களை கடத்திய 5 லாரிகளை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் பறிமுதல் செய்தார்.
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி பாறை சரிந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளில் பாறை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 6 குழுவினர் அந்த குவாரிகளை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் இன்று வரை இந்த குவாரிகளுக்கு கனிம வளங்களை ஏற்றிச்செல்ல வாகனங்களுக்கு நடை சீட்டு வழங்கப்படவில்லை. இருப்பினும் இரவு நேரங்களில் கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் வள்ளியூர் காவல் உதவி கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா நள்ளிரவு காவல்கிணறு பகுதியில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது பெரிய கனரக டாரஸ் லாரிகளில் எம் சாண்ட், ,ஜல்லி உள்ளிட்ட கனிம பொருட்களை ஏற்றிவந்த 5 லாரிகளை பிடித்து சோதனை செய்தார். அப்போது அவர்கள் முறைகேடாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குவாரியின் நடை சீட்டை பயன்படுத்தி இருக்கன்துறையில் உள்ள குவாரியில் இருந்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து 5 லாரிகளை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநர்களையும் உதவி கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா கைது செய்தார். மேலும் இதுபோல் 15 லாரிகள் முறைகேடாக கேரளாவிற்கு நேற்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு முறைகேடாக சென்ற லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM