பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா இரண்டு நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் திகார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சல்மான் கான் கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் கருப்புரக அபூர்வ மான்களை வேட்டையாடியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை மான்களை பிஸ்னோய் சமுதாயத்தினர் புனிதமாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு லாரன்ஸ் பிஸ்னோய் கோர்ட்டுக்கு வெளியில் அளித்த பேட்டியில், “நாங்கள் சல்மான் கானை ஜோத்பூரில் கொலைசெய்வோம். நாங்கள் செய்தபிறகு அனைவருக்கும் தெரியவரும்” என்று தெரிவித்திருந்தார். இந்த மிரட்டல் இப்போது எதிரொலிக்கிறது.
லாரன்ஸ் கூட்டாளிகளால் சல்மான் கானுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது என்பதற்காக அவருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மும்பை துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் இது தொடர்பாக அளித்த பேட்டியில், “2020-ம் ஆண்டு லாரன்ஸ் கூட்டாளியைக் கைதுசெய்தபோது அவனிடம் நடத்திய விசாரணையில், சல்மான் கானைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தான்.
அதோடு சல்மான் கானைக் கொலைசெய்ய லாரன்ஸ் கூட்டாளி ராகுல் என்பவன் மும்பை வந்து கொலைசெய்ய ஒத்திகை பார்த்துவிட்டுச் சென்றதும் ராகுலிடம் விசாரித்ததில் தெரியவந்திருக்கிறது” என்று கூறினார். லாரன்ஸ் கூட்டத்தினரின் மிரட்டலைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலாவை தாங்கள்தான் படுகொலை செய்தோம் என்றும், தங்களது கூட்டாளி விக்கியை படுகொலை செய்ததற்குப் பழிவாங்கியதாகவும் லாரன்ஸ் பிஸ்னோய் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. லாரன்ஸ் இப்போது சிறையில் இருப்பதால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தை அவன் கூட்டாளிகள் நிர்வகித்து வருகின்றனர்.