பஞ்சாப் பாடகரை 30 முறை சுட்ட கொலையாளிகள்| Dinamalar

சண்டிகர் : பஞ்சாப் பாடகர் சித்து மோசிவாலாவை, கொலையாளிகள் 30 முறை சுட்டு, அவர் இறந்ததை உறுதிப்படுத்திய பின் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு நேற்று முன்தினம் காங்கிரசை சேர்ந்த, பிரபல பாடகர் சித்து மோசிவாலாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்த தாவது:சித்து மோசிவாலா சென்ற காரை இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள் வழி மறித்து துப்பாக்கியால், 30 முறை சுட்டுள்ளனர். அதன் பின் சித்து இறந்து விட்டாரா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது, கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, சித்து மோசிவாலா கொல்லப்பட்டதற்கு கனடாவைச் சேர்ந்த, கோல்டி பிரார் என்பவர் பொறுப்பேற்று உள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:கடந்த ஆண்டு, அகாலி தள தலைவர் விக்கி மிதுகெரா மற்றும் காங்கிரசை சேர்ந்த குர்லால் பிரார் கொலை வழக்கில் சித்து மோசிவாலா பெயர் அடிபட்டது. இது குறித்து புகார் வந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் நான் பழி தீர்த்துக் கொண்டேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோல்டி பிரார் மீது ஏராளமான கொலை வழக்குகள் இந்தியாவில் உள்ளன. சித்து மோசிவாலாவை கொல்ல திஹார் சிறையில் சதித் திட்டம் தீட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது. சித்து மோசிவாலா சிறந்த பாடகர் என்ற போதிலும் அவர், துப்பாக்கி கலாசாரத்தை ஆதரித்து பெரும்பாலான பாடல்களை பாடி வந்தார். இதற்காக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்., சார்பில் போட்டியிட்ட சித்து மோசிவாலா, ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் தோல்வியடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ஊழல் குற்றச்சாட்டில் விஜய் சிங்லாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

‘சட்டப்படி நடவடிக்கை’

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியதாவது:சித்து மோசிவாலாவின் போலீஸ் பாதுகாப்பு அகற்றப்பட்ட மறுநாள் அவர் கொல்லப்பட்டுள்ளனார். எதற்காக அவருக்கு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை அரசு கேட்டுக் கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.