லைலா என்றால் சிரிப்பு!
திரைத்துறையில் சிரிப்புக்கு இலக்கணம் வகுத்த லைலா, தன் கலகல சிரிப்பால் எல்லோரையும் ஈர்க்கும் ஆற்றல் படைத்தவர். திருமணத்துக்குப் பிறகு, சினிமாவிலிருந்து பிரேக் எடுத்து, அமைதி அமைதி அமைதியோ அமைதியாக இருந்தவர், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ரீ-என்ட்ரிக்குத் தயாராகியிருக்கிறார். நடிகர் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவரைச் சந்தித்தோம்.
லைலாவையும் சிரிப்பையும் பிரித்துப் பார்ப்பது அவ்வளவு சுலபமான காரியமா? அதைச் சோதிக்கலாமே என குறும்பான செக்மென்ட்டுடன் வீடியோ பேட்டியைத் தொடங்கினோம். ஆனால், ‘வேலைனு வந்துட்டா நான் கெட்டிக்காரி’ என்பதுபோல சிரிப்பைக் கட்டுப்படுத்தி நமக்கு ஆச்சர்யம் கொடுத்தார். அதேசமயம், நாம் கொடுத்த டாஸ்குகளை ஹீலியம் பலூனைப் பயன்படுத்தி செய்துகாட்டி அதகளம் செய்தார்.
“சென்னை என் மனசுக்கு நெருக்கமான ஊர். என் க்ளோஸ் ஃபிரெண்ட்ஸ் சிலர் இங்கே வசிக்கிறாங்க. அதனால, இத்தனை வருஷமா நான் சினிமாவுல நடிக்காட்டியும், அடிக்கடி சென்னை வந்து தோழிகளோடு நேரம் செலவிடுவேன். சென்னையில ஒரு கப் காபி குடிச்சுட்டு, பீச்சுல ஒரு வாக் போனா கிடைக்கிற ஃபீல் குட் உணர்வு, வேற லெவல் எனர்ஜியைக் கொடுக்கும்” – சென்னைக்கும் தனக்குமான பந்தத்தை நான்-ஸ்டாப் சிரிப்புடன் அழகாக விவரித்த லைலா, அதே உற்சாகத்துடன் தனது சினிமா அனுபவங்களையும் நினைவுகூர்ந்தார்.
“நான் வளர்ந்ததெல்லாம் மும்பையில. படிப்புல ஆவரேஜ்தான். ஆனா, ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமா இருந்தேன். ஸ்கூல் படிக்கும்போது அடிக்கடி கிளாஸை கட் அடிச்சுட்டு கிரவுண்டுல சுத்திட்டிருப்பேன். சினிமாவுல நடிக்கணும்னு கனவுலயும் நான் நினைச்சதில்லை. பாலிவுட் காமெடி நடிகர் மெஹமோத், தான் இயக்கிய கடைசிப் படமான ‘துஷ்மன் துனியா கா’வுல என்னை நடிகையா அறிமுகப்படுத்தினார். பிறகு, தென்னிந்திய சினிமா எனக்குக் கொடுத்த வரவேற்புல கடகடனு என் சினிமா கிராஃப் உயர்ந்துச்சு.
இப்படித்தான் நடிக்கணும்னு எந்த பிளானிங்கும் இல்லாமதான் ஆரம்பத்துல வேலை செஞ்சேன். கிளாமர் ரோல் சரிவருமான்னு நான் ட்ரை பண்ணதுகூட இல்லை. ‘தீனா’ படத்துல ‘காதல் வெப்சைட்’ பாட்டுக்கு கிளாமர் காஸ்ட்யூம் ட்ரை பண்ணிப் பாருங்கன்னு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் என்கிட்ட சொன்னார். அரை மனசோட சம்மதிச்சேன். நான் நினைச்சது மாதிரியே, எனக்கு கிளாமர் டிரஸ் செட் ஆகலை. அதுக்கப்புறமா, இனி ஒன்லி ஹோம்லி ரோல்தான்னு முடிவெடுத்தேன். அதனால, சில பட வாய்ப்புகளையும் தவிர்த்திருக்கேன்” என்கிற லைலாவுக்கு, இயக்குநர் ப்ரியதர்ஷனின் ‘சிநேகிதியே’ பட வாய்ப்பைத் தவறவிட்ட வருத்தம் இப்போதும் இருக்கிறதாம்.
மறக்க முடியாத சினிமா அனுபவங்களை அசைபோடச் சொல்லி லைலாவிடம் கூறினோம். தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தெலுங்குப் பட நினைவிலிருந்து ஆரம்பித்தார். ” ‘Naa Hrudayamlo Nidurinche Cheli’ங்கிற தெலுங்குப் படம் எனக்கு எதிர்மறையான அனுபவத்தைக் கொடுத்துச்சு. அந்தப் படத்துல நான் கேக் கட் பண்ற மாதிரி ஒரு சீன் வரும். அப்போ ஹீலியம் பலூனை வெடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தாங்க.
எதிர்பாராத வகையில பயங்கர சத்தத்தோடு அந்த பலூன் வெடிச்சதுல, எப்படியோ காயமில்லாம தப்பிச்சேன். ஆனா, அந்த விபத்தால எனக்கு ஏற்பட்ட மிரட்சியைச் சுலபமா கடந்து போக முடியலை. அதுக்கப்புறமா கொஞ்ச நாள்களுக்கு ஷூட்டிங்லயே நான் கலந்துக்கலை. என்னைச் சமாதானப்படுத்தினாங்க. பிறகுதான் மறுபடியும் நடிச்சுக்கொடுத்தேன். அந்தச் சம்பவத்தை நினைச்சா இப்பவும் திகில் உணர்வுதான் ஏற்படுது.
‘நந்தா’ படத்துக்காக ராமேஸ்வரத்துல பீச் லொகேஷன்ல நடிச்சது வித்தியாசமான அனுபவம். இலங்கைத் தமிழ்ப் பேசி நடிக்க கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. அந்தப் படத்துக்கு அப்புறமா, மறுபடியும் டைரக்டர் பாலா சார், சூர்யா காம்போவுல நடிக்க வாய்ப்பு கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை. ஆனா, ‘பிதாமகன்’ மூலமா அது சாத்தியமாச்சு. நான் நடிச்ச படங்கள்லயே பெஸ்ட் மெமரீஸ் கிடைச்ச படங்கள்ல ‘பிதாமகன்’ முக்கியமானது. ஏன்னா, அந்தப் படத்துல வர்ற என் மஞ்சு கேரக்டரைப் போலவே, ஷூட்டிங் ஸ்பாட்லயும் செம ரகளை செஞ்சேன்.
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதாதான் எனக்கு ரெகுரலா குரல் கொடுத்தாங்க. ‘பிதாமகன்’ படம் ரிலீஸ் நேரத்துல அவங்க கர்ப்பமா இருந்தாங்க. அந்தப் படத்துல நான் பயங்கரமா குறும்பு பண்ணியிருப்பேன்ல. டிரெயின்ல எமர்ஜென்சி செயினைப் பிடிச்சு நான் இழுக்கிறது, அந்த ‘உருட்டு’ சீன்ல சூர்யாவை போலீஸ்ல நான் பிடிச்சுக் கொடுக்கிறதுனு பல காட்சிகள்ல ரொம்பவே கத்தி நடிச்சிருப்பேன். கர்ப்பமா இருந்ததால அந்த ஃபீலை டப்பிங்ல வெளிப்படுத்த சவிதா ரொம்பவே சிரமப்பட்டாங்க. அதனால, குறிப்பிட்ட சில சீன்ஸுக்கு மட்டும் நானே வாய்ஸ் கொடுத்தேன்” என்று புன்னகைப்பவர், பியூட்டி, ஃபேஷன் உள்ளிட்ட தனது பர்சனல் விஷயங்கள் குறித்தும் பேசினார்.
“என் சின்ன வயசுலேருந்தே மீன், முட்டை தவிர வேறு எந்த நான்வெஜ் உணவும் சாப்பிட மாட்டேன். ஆனா, என் கணவர் மற்றும் குழந்தைகளுக்குப் பிடிச்ச அசைவ உணவுகளைச் சமைச்சுக் கொடுப்பேன். ரெகுலரா டயட் ஃபாலோ பண்ணுவேன். பெரும்பாலும் வெஜ் உணவுகளைத்தான் எடுத்துப்பேன். எங்க வீட்டுலயே மினி ஜிம் இருக்கு. ரெகுலரா உடற்பயிற்சியுடன் யோகாவும் செய்வேன். தினமும் மூணு லிட்டருக்கும் குறையாம தண்ணீர் குடிப்பேன். ஷாப்பிங்ல எனக்குப் பெரிசா ஆர்வம் கிடையாது. கடைக்குப் போனாலும் சில நிமிடங்கள்ல ஷாப்பிங் முடிச்சுடுவேன்.
ஷூட்டிங், வெளிவேலைகள் இல்லைனா பெரும்பாலும் மும்பையிலதான் இருப்பேன். பல மொழிப் படங்களையும் பார்ப்பேன். ஜோதிகாவுடன் இன்னும் நட்புல இருக்கேன். நடிகை மாளவிகாவின் குழந்தையும் என் பசங்களும் ஒரே ஸ்கூல்லதான் படிக்கிறாங்க. அதனால, ஸ்கூல் விழாக்கள்ல நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி சந்திச்சுப்போம்” என்று சிம்பிளாக முடித்தவர், இறுதியாகத் தனது சினிமா எதிர்பார்ப்புகளைச் சொன்னார்.
“நான் ஜோடியா நடிச்ச ஹீரோக்களுக்கு அம்மாவாவும், இப்போதைய இளம் நடிகர்களுக்கு அக்கா, அண்ணி ரோல்கள்லயும் நடிக்க எனக்கு விருப்பமில்லை. ஹோம்லி, ஹியூமர் ரோல்கள்லதான் அதிகமா நடிச்சிருக்கேன். அப்படி நடிக்கிறதுதான் எனக்கு விருப்பம்னு நினைச்சுடாதீங்க.
சஸ்பென்ஸ், திகில், வில்லி மாதிரியான நெகட்டிவ் ரோல்கள்ல நடிக்கணும்னு எனக்கு ரொம்பவே ஆசை. அப்படியான கதை வந்தா, தொடர்ந்து நடிச்சுகிட்டே இருப்பேன்” என்றவர், தனது டிரேட் மார்க் சிரிப்புடன் விடைகொடுத்துவிட்டு, ‘சர்தார்’ படப்பிடிப்புக்குச் சிட்டாகப் பறந்தார்.