கோவை: கோவை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரு குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என சான்று வழங்கப்பட்டுள்ளது.
கோவை கே.கே.புதூரைச் சேர்ந்தவர் எஸ்.நரேஷ் கார்த்திக் (33). இவர் தனது மூன்றரை வயது மகளை எல்கேஜி வகுப்பில் சேர்க்க பல பள்ளிகளை நாடினார். விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிடவில்லை என்பதால், பல பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் தனது குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழைப் பெற கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்த 5 நாட்களில் அவருக்கு இந்தச் சான்று கிடைத்துள்ளது. இவ்வாறு ஒருவர் சான்று பெறுவது கோவையில் இதுவே முதல்முறையாகும்.
இதுதொடர்பாக நரேஷ் கார்த்திக் கூறும்போது, “பெற்றோர் தங்களது குழந்தைகளின் சாதி, மதம் குறித்து குறிப்பிடத் தேவையில்லை என 1973-ம் ஆண்டு தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல பள்ளிகளுக்குத் தெரிவதில்லை.
இவ்வாறு சான்று பெறுவதால் வருங்காலத்தில் சாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையையும் எனது குழந்தை பெற இயலாது என்று தெரிந்துதான் விண்ணப்பித்தேன்.
அதேபோல, வருங்காலத்திலும் இதில் எந்தவித மாற்றமும் செய்யமாட்டேன் எனவும் விண்ணப்பிக்கும்போது உறுதி அளித்துள்ளேன். இது ஒரு முன்னுதாரணம் என்பதால், இனி இதுபோன்று விண்ணப்பிப்போருக்கு எளிதில் சான்று கிடைக்கும்” என்றார்.
ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:
அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், ஏற்கெனவே கடந்த 2013 ஜூன் 6-ம் தேதி தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத்தில், “மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவரின் பள்ளிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் சாதியில்லை, மதமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ விரும்பினால், சம்பந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.