அகமதாபாத்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல், பாஜகவில் நாளை இணைகிறார்.
குஜராத்தில் பட்டிதார் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல் (28). இவர், காங்கிரஸில் சேர்ந்து பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குஜராத் மாநில செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், சமீபகாலமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த ஹர்திக் படேல், தன்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து கடந்த 18-ம் தேதி காங்கிரஸில் இருந்து விலகினார். பாஜக தலைமையை புகழ்ந்து கருத்து தெரிவித்தார். அதனால், அவர் பாஜகவில் சேரலாம் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பாஜகவில் 2-ம் தேதி (நாளை) சேர இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பட்டிதார் சமூக மக்களிடையே செல்வாக்கு பெற்ற ஹர்திக் படேல், பாஜகவில் இணைவது அக்கட்சிக்கு பலமாகவும் காங்கிரஸுக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஹர்திக் படேல் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.