மான்டேகார்லோ,
இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 7-வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள மான்டேகார்லோ ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
பலத்த மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் 260.286 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் (ரெட்புல் அணி) 1 மணி 56 நிமிடம் 30.265 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச் சென்றார்.
இந்த சீசனில் அவரது முதல் வெற்றி இதுவாகும். அவரை விட 1.154 வினாடி மட்டுமே பின்தங்கிய ஸ்பெயின் வீரர் கார்லஸ் செயின்ஸ் (பெராரி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். நடப்பு சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) 3-வது இடம் பிடித்தார். இந்த சீசனில் தொடர்ந்து சறுக்கி வரும் 7 முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதுவரை நடந்துள்ள 7 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சார்லஸ் லெக்லெர்க் (மொனாக்கோ) 116 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், செர்ஜியோ பெரேஸ் 110 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி அஜர்பைஜானில் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.