புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: புகையிலை பயன்பாட்டையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது, அதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்பமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அன்புமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “இன்று #WorldNoTobaccoDay. “புகையிலை: நமது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்” (Tobacco: Threat to our environment) என்பதை இந்நாளின் நோக்கமாக #WHO அறிவித்துள்ளது. உடல்நலக் கேடு மட்டுமின்றி விவசாயம்,

தயாரிப்பு, விநியோகம், குப்பை என அனைத்திலுமே புகையிலை பெரும்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், புகையிலையால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்து கொள்ளவும், புகையிலை பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்துத் தரப்பு மக்களும் முன்வர வேண்டும்.

புகையிலை ஒவ்வொரு ஆண்டும் உலகில் 80 லட்சத்திற்கும் கூடுதலான உயிர்களை காவு வாங்குகிறது. புகைப்பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 8.40 கோடி டன் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் விடப்படுகிறது. புகையிலை சாகுபடிக்காக நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சப்படுகிறது.

தமிழகத்தில் புகையிலையால் மட்டும் ஆண்டுக்கு 8000 டன் குப்பைகள் சேருகின்றன. புகையிலை நேரடியாக மட்டுமின்றி, மறைமுகமாகவும் மனிதர்களைக் கொல்கிறது. புகைப்பவர்களை விட அவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்!. அதனால் தான் பொது இடங்களில் புகைப்பதை தடை செய்தேன்.

ஆனால், இப்போது புகையிலை பயன்பாட்டையே முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.