பெரும்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் பைக் தீப்பிடித்து எரிந்தது, இதில் தொழிலாளி படுகாயமடைந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி அமலி நகரை சேர்ந்தவர் வர்கீஸ். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயமேரி அப்பதான் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக வர்கீஸ் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பெரும்பாறைக்கு சென்றுள்ளார். அப்போது மூலக்கடை-புல்லாவெளி பகுதியில் வந்தபோது அந்த வழியாக எதிரே வந்த தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து வர்கீஸ் வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதற்கிடையே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது.
இதனையடுத்து பேருந்தில் வந்த பயணிகள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.