மஞ்சள் நீலக்கயிறு கட்டிய மாணவனை அரை நிர்வாணமாக்கி கொடுமை..! ஓட ஓட விரட்டி தாக்கினர்..!

நெல்லையில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நீலம் மற்றும் மஞ்சள் வர்ணக்கயிறு அணிந்து வந்த மாணவனை 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள்  சேர்ந்து அடித்து சட்டையை கிழித்து அரை நிர்வாணமாக ஓடவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் சாதி வெறியின் கோரமுகமாக முதியவரை சில சட்ட கல்லூரி மாணவர்கள் சாதி ரீதியாக தாக்கி நிர்வாணமாக ஓடவிடுவார்கள். இந்தக்காட்சி சினிமா ரசிகர்களிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதே போன்ற ஒரு நிஜ சம்பவம் நெல்லையில் உள்ள பள்ளி மாணவர்களிடையே நடந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில் வழக்கம் போல வீடுகளுக்கு திரும்புவதற்காக மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, கையில் மஞ்சள் மற்றும் நீல வர்ணக்கயிறும், நீல வர்ண சட்டையும் அணிந்திருந்த ஒரு மாணவரை 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி சரமாரியாக தாக்கி அவரது சட்டையை கிழித்து குப்பை தொட்டிக்கு அருகில் வீசினர்.

அடிதாங்க முடியாமல் , அரை நிர்வாண நிலையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து அந்த மாணவர் சாலையில் தப்பி ஓட , மாணவர் கும்பல் வெறியுடன் அவரை விரட்டிச்சென்று சாலையில் ஓடவிட்டு தாக்கியது

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் .பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் கும்பலாக நின்று கொண்டிருந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் கும்பல்களை காவல்துறையினர் எச்சரித்து விரட்டி விட்டனர்.

தாக்கியவவர்களும் , தாக்குதலுக்குள்ளானவரும் சிஎஸ்ஐ திரு மண்டலத்துக்கு உட்பட்ட கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்பதும் தாக்கபட்ட மாணவன் தனது கையில் நீலம் மற்றும் மஞ்சள் வர்ணகயிறு அணிந்திருந்ததாகவும், அதனை அகற்றச் சொல்லி மற்றோரு தரப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி சாதி வெறியுடன், அந்த ஒரு மாணவனின் சட்டையை கிழித்து ஓடவிட்டு தாக்கியதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெயர் விவரங்களை சேகரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாதிய ஒடுக்குமுறை இந்த சாதி, அந்த சாதி என்ற பேதமில்லாமல் எல்லா சாதியிலும் நிறைந்திருப்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.