மதுரை: மதுரையில் பெரியார் பஸ் நிலையம், மாசி வீதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தும், அங்கிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட அருகில் உள்ள மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு வரவில்லை.
மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள பழமையான கூடலழகர் பெருமாள் கோயில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை பெற்றுள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலுக்கு காலையும், மாலையும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்வார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அலைமோதும். கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து விஷேசமாக வழிபடுவார்கள். கூடலழகர் கோவில் வேண்டுதல் ஸ்தலமாகவும் திகழ்கிறது. கோயிலை 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்தக் கோயில் தெப்பக்குளத்தில் நடக்கும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த தெப்பக்குளத்திற்கு கடந்த காலத்தில் பெரியார் பஸ் நிலையம் பகுதி, மாசி வீதிகளில் பெய்யும் மழைநீர் இயல்பாக வந்தன. அதுபோல் தெப்பக்குளத்திற்கு சுற்றிலும் உள்ள நாலாபுறமும் பெய்யும் மழைநீரும் வந்தது. காலப்போக்கில் நகரமயமாக்கலில் தனியார் ஆக்கிரமிப்பாளர்களால் தெப்பக்குளத்தின் நீர் வரத்து கால்வாய்கள் மாயமாகின. தெப்பக்குளத்தை சுற்றிலும் கடைகள் அமைக்கப்பட்டது. அதனால், தெப்பக்குளத்திற்கு நீர்வரத்து முற்றிலும் தடைப்பட்டு நிரந்தரதமாக வறட்சிக்கு இலக்காகின. அதனால், கடந்த 1960-ம் ஆண்டிற்கு பிறகு இக்கோயில் தெப்பஉற்சவம் விழா, நிலை உற்சவ விழாவாகவே நடந்து முடிந்தது. இந்த தெப்பக்குளத்தில் நிரப்பப்படும் தண்ணீர், தெப்ப உற்சவ விழாவுக்கு மட்டுமில்லாது அந்த பகுதி மதுரை நகரின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
இந்நிலையில், தெப்பக்குளத்தை சுற்றிலும் கடைகள் ஆக்கிரமிப்பு அதிகமாகி தெப்பக்குளமும் மாயமாகும் அபாயம் ஏற்பட்டது. இந்து அறநிலையத் துறை, ஆக்கிரமிப்புகளை அகற்றி தெப்பக்குளத்தை மீட்டது. மாநகராட்சி நிர்வாகம் 2 ஆண்டிற்கு முன் பெரியார் பஸ் நிலையம் பெய்யும் மழைநீர் தெப்பக்குளத்திற்கு வரும் வகையில் கால்வாய் அமைத்து. அந்த கால்வாயில் முதல் முறையாக தெப்பக்குளத்திற்கு தண்ணீரும் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு மாநகராட்சியும் வழக்கம்போல் அந்த கால்வாயில் தொடர்ச்சியாக நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், தற்போது மீண்டும் புதிய பெரியார் பஸ்நிலையத்தில் பஸ் போக்குவரத்து தடைப்படும் அளவிற்கு மழை பெய்ததால் தெப்பக்குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீர் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வராமல் நின்றுவிட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய பெரியார் பஸ் நிலையம், மாசி வீதிகளில் கோடை மழை கொட்டி தீர்த்தது. அந்த பகுதியில் நின்ற கார்கள், இரு சக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் வகையில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவிற்கு அப்பகுதிகளை மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. ஆனால், அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கிருந்து அருகில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு வரவில்லை. வழக்கம்போல் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் வானத்தில் இருந்து நேரடியாக பெய்த மழைநீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. இதற்கு முன் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் நிலையும் இதுபோலேவே நிரந்தரமாக வறட்சிக்கு இலக்காகி கிடந்தது.
அதன்பிறகு மாநகராட்சி நிர்வாகமும், இந்து அறநிலையத்துறையும் இணைந்து வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தெப்பகுளத்திற்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தது. அதன்பிறகு தற்போது வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகுப் போக்குவரத்து விடும் அளவிற்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துவிட்டது. அதுபோல், மாநகராட்சியும் இந்து அறநிலையத் துறையும் இணைந்து கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திலும் நிரந்தரமாக தண்ணீர் தேக்க சிறப்பு ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.