வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 2015ல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதமர் மக்கள் மருந்தகங்கள், முதல் முறையாக மே மாதம் 100 கோடி ரூபாய் வருவாயை எட்டியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு ரூ.600 கோடி மிச்சமானதாக தெரிவித்துள்ளனர். பெண்கள் இத்திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களில் மருந்தகம் தொடங்கினால் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ஏழை, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் பிராண்ட் நேம் இல்லாத மருந்துகளை வழங்க 2015ல் பிரதமர் மக்கள் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டது. சிறியளவில் தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்று 739 மாவட்டங்களில் 8,735 இடங்களில் அமைந்துள்ளது. மார்ச் 2024க்குள் இந்த மருந்தகங்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 406 மாவட்டங்களில் 3,579 வட்டங்களில் இந்த மருந்தகங்கள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளனர். தற்போது, இந்த மருந்தகங்களில் 1,600 க்கும் மேற்பட்ட மருந்துகள், ஒரு ரூபாய்க்கு சுவிதா சானிடரி நாப்கின்கள், 250 அறுவை சிகிச்சை சாதனங்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.
சிறிய நகரங்கள் மற்றும் வட்டார தலைமையிடங்களில் வசிப்பவர்கள் தற்போது மருந்தகங்கள் திறக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி.,யினர், மலை மாவட்டங்கள், தீவில் உள்ள மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் இம்மருந்தகங்களின் ஆண்டு வருவாய் ரூ.8 கோடியில் ஆரம்பித்து இன்று மாத வருவாய் ரூ.100 கோடியை எட்டியுள்ளது. கோவிட் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த மே மாதத்தில் ரூ.83.7 கோடிக்கு மருந்துகள் விற்பனையாகியுள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் சரியான நேரத்தில் மருந்துகளை விநியோகம் செய்ய ஏதுவாக சென்னை, குருகிராம், கவுகாத்தி மற்றும் சூரத்தில் கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
Advertisement