மரத்தில் தலைகீழாக தொங்கியபடி உயிருக்குப் போராடிய காகம் ஒன்றை இளைஞர்கள் பொறுமையாக மீட்ட நெகிழ்ச்சி சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை தக்கலை பகுதியில் அமைந்துள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. நேற்று காகம் ஒன்று இரை தேடியபடி இந்த அரசுப் பள்ளியின் முன் பக்கம் இருக்கும் வேப்பமரத்தில் வந்து அமர்ந்தது. இரை தேடிவந்த அந்த காகம் வேப்பமரத்தில் அமர்ந்தபோது அந்த மரத்தில் பின்னி பிணைந்து கிடந்த நூலில் அதன் கால்கள் சிக்கியுள்ளது.
காலில் நூல் சிக்கியதை உணராத அந்த காகம் வேறு பகுதிக்கு இரை தேட பறந்துசெல்ல முயன்றிருக்கிறது. ஆனால் காலில் சிக்கியிருந்த நூலால் நிலை தடுமாறி தலைகீழாக தொங்கியபடி பறந்துசெல்ல முடியாமல் உயிருக்கு போராடியுள்ளது. காகத்தின் இந்த பரிதாப நிலையை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலான நிலையில் இதை பார்த்த அழகியமண்டபம் அடுத்த கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த அட்லின் வினோத், விமல், ரெஜி என்ற இளைஞர்கள் பதிவிட்ட நபரிடம் விபரத்தை கேட்டறிந்து இன்று அந்த பள்ளிக்கு சென்றனர். அப்போதும் அந்த காகம் தலைகீழாக தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. உடனடியாக அந்த இளைஞர்கள் பள்ளியில் இருந்த கிளை கம்பு ஒன்றை வாங்கி விறு விறுவென வேப்பமரத்தில் ஏறி அந்த காகத்தை மீட்டனர். காலில் சிக்கியிருந்த நூலையும் கத்தியால் பிரித்தெடுத்து அந்த காகத்தை சுதந்திரமாக பறக்கவிட்டனர்.
ஆனால் ஆபத்தில் இருந்து மீண்ட அந்த காகம் காலில் ஏற்பட்ட காயத்தால் பறக்கமுடியாமல் அவதியுற்றது. இதைக்கண்டு அங்கு திரண்ட காகம் கூட்டங்களும் கத்தி கூப்பாடு போட்டது. இதனையடுத்து காயத்தோடு இருந்த காகத்தை இளைஞர்கள் வனத்துறை ஊழியரை வரவழைத்து ஒப்படைத்தனர். உயிருக்குப் போராடிய காகத்தை பலமணி நேரம் செலவிட்டு மீட்டு மறுவாழ்வு அளித்த இளைஞர்களின் செயலை அந்த வழியாக சென்றவர்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்திச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM