திருவனந்தபுரம் : விவசாய நிலத்தில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்ற மலையாள திரைப்பட நடிகர் ஜோஜு ஜார்ஜுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், 44. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துஉள்ளார். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
பந்தயம்
இவர், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள எஸ்டேட் ஒன்றில், தன் ஜீப்பில் பந்தயத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியானது. விவசாய நிலத்தில், அனுமதி இன்றி பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது கேரள மாணவர் சங்கம் போலீஸில் புகார் அளித்தது.இதைஅடுத்து இடுக்கி மாவட்ட ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
ஆபத்தான முறை
பின்னர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும் அனுமதியின்றி பந்தயத்தில் பங்கேற்றதற்காகவும் மோட்டார் வாகனத்துறை அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தது. சில நாட்களுக்கு முன் இடுக்கி ஆர்.டி.ஓ., முன் ஆஜரான அவர், அந்த அபராதத் தொகையை செலுத்தினார்.
Advertisement