ஜூன் மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் 20 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற வாய்ப்பு இல்லை என்றாலும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணியை மாநிலங்களவையில் தோற்கடிக்க தேவையான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இல்லை என்கிற களநிலவரம் தொடர்கிறது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மாநிலங்களவை வலு 50-க்குள் அடங்கி விடுவதால், மத்திய அரசின் முக்கிய மசோதாக்களை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தோற்கடிக்க வாய்ப்பு இல்லை என அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சிகளின் வலு மாநிலங்களவையில் அடுத்த கூட்டத் தொடர் முதல் 74 ஆக இருக்கும். ஆனாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இதனால் அச்சுறுத்தல் இல்லை என கருதப்படுகிறது.
மாநிலங்களவையில் ஒன்பது உறுப்பினர்களுடன் முக்கிய கட்சிகளில் ஒன்றாக விளங்கும் பிஜூ ஜனதா தளம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் 7 உறுப்பினர்கள் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் மற்றும் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோலவே ஆந்திரப்பிரதேசம் முதல்வர் ஜெகன் ரெட்டியும் பலமுறை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ள நிலையில் அவருக்கு பாஜகவுடன் இணக்கமான தோழமை உள்ளது எனக் கருதப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் நான்கு உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். இதைத் தவிர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி கே வாசன் மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் பாஜவுக்கு ஆதரவான நிலைப்பாடுடன் உள்ளார்கள். மாநிலங்களவையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சமீப காலங்களாக பாரதிய ஜனதாவை எதிர்த்தாலும், இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படவில்லை.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலங்களவையில் தனது வலுவை கணிசமாக அதிகரித்துள்ள ஆம் ஆத்மி கட்சியும் தொடர்ந்து காங்கிரசுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை 8ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக 10 உறுப்பினர்களுடன் முக்கிய இடம் வகிக்க உள்ளது. இதைத் தவிர ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளில், தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்கள் மற்றும் சிவசேனா 3 இடங்கள் என மாநிலங்களவையில் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் உள்ளன.
அதே சமயத்தில் மாநிலங்களவையில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட சமாஜ்வாதி கட்சியின் வலு இந்த முறை மூன்றாக குறைகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கபில்சிபல் மற்றும் இன்னொரு மாநிலங்களவை பதவியை ஜெயந்த் சவுத்ரி ஆகியோருக்கு விட்டுக் கொடுப்பதால் அகிலேஷ் யாதவ் கட்சியின் வலு குறைகிறது. ஆனால் கபில்சிபல் மற்றும் ஜெயந்த் சவுதரி ஆகியோரும் அரசுக்கு எதிராக செயல்படுவார்கள் என நம்பப்படுகிறது.
அதே சமயத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசுக்கு ஆதரவாகவோ அல்லது பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டோ செயல்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திறலும் சூழ்நிலை இல்லை என்பதால் மாநிலங்களவையில் பாஜகவின் செல்வாக்கு தொடரும் எனவும் விரைவில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கே வெற்றி வாய்ப்பு எனவும் கருதப்படுகிறது.
-கணபதி சுப்பிரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM