புதுடெல்லி: வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991 கியான்வாபிக்கு பொருந்துமா என்பதன் வழக்கு ஜூலை 4-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில், முஸ்லிம் தரப்பு வாதங்கள் இன்னும் முடியவில்லை.
உத்தரப் பிரதேசம் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிங்காரக் கவுரி அம்மன் தரிசனத்திற்கு வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த வாரணாசியின் சிவில் நீதிமன்ற உத்தரவின்படி, கியான்வாபி மசூதியில் களஆய்வு நடைபெற்றது. இதைத் தடுக்க முன்னதாக கியன்வாபி மசூதி நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை களஆய்விற்கு பின் விசாரித்த உச்ச நீதிமன்றம், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது.
இதையடுத்து, தன் விசாரணையை தொடங்கிய மாவட்ட நீதிமன்றத்தில் வேறு பல மனுக்களும் தொடுக்கப்பட்டன. இதன் நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷ், மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-இன்படி கியான்பிக்கு பொருந்துமா என்பதை முதலில் விசாரித்தது. இதன் மீதான மசூதியின் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியின் வாதம் முதலில் தொடங்கியது. கடந்த மே 26-இல் தொடங்கிய வாதம் நேற்று வரை முடியவில்லை.
இந்நிலையில், கியான்வாபி வழக்கை கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 4 வரை ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு பிறகே மற்ற மனுக்கள் கவனத்தில் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காசி விஸ்வநாதர் கோயிலை இடித்து முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாகப் புகார் உள்ளது. இதன் அடிப்படையில் இம்மசூதி மீது வேறுபல வழக்குகளும் தொடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதனிடையே, மசூதியின் களஆய்வில், தொழுகைக்கு முன் கைகால் கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்ததாகச் சர்சை கிளம்பியது. இதை மறுக்கும் மசூதியினர் அது செயற்கை நீரூற்று எனக் கூறியுள்ளனர். எனினும், காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம், ஒசுகானாவின் சிவலிங்கத்திற்கு அன்றாடம் பூசை செய்து ராஜ போகம் வழங்கவும் மனு அளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மனுவில், கியான்வாபியில் முஸ்லிம்கள் செல்லத் தடை விதித்து அதை இந்துக்களிடம் ஒப்படைக்கவும் கோரப்பட்டுள்ளது.
இம்மனுவை மாவட்ட நீதிமன்றம், வாரண்சியின் சிவில் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதன் விசாரணையும் கடந்த வாரம் தொடங்கி நடைபெறுவது நினைவுகூரத்தக்கது.