சென்னை: மாநில அரசுகளுக்கு மே இறுதி வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையாக ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி கிடைக்கும்.
நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் மாநிலங்களின் சொந்த வரிவருவாய் பாதிக்கப்படும் என்பதால், 5 ஆண்டுகளுக்கு இந்த பாதிப்பின் சுமையை குறைக்கும் வகையில் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. அதன் அடிப்படையில், மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க, சில பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு, அந்த வருவாய் இழப்பீட்டுக்கான நிதியத்தில் சேர்க்கப்பட்டது. அந்த தொகை கடந்த 2017 ஜூலை முதல் மாநிலங்களுக்கு இழப்பீடாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2017-18, 2018-19 நிதியாண்டுகளில் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டது. மாநிலங்களின் வருவாய் 14 சதவீதம் உயர்ந்தபோதும், அதே அளவுக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்ட மேல் வரி வசூல் உயரவில்லை. இதனிடையே, கரோனா பாதிப்பு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட வருவாய்க்கும், மேல் வரி வருவாய் உட்பட கிடைத்த வருவாய்க்கும் இடையில் அதிக இடைவெளி உருவானது. இதனால், மாநிலங்களுக்கு போதிய அளவு இழப்பீட்டை மத்திய அரசால் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
இதை நிவர்த்தி செய்ய, மத்திய அரசு கடன் வாங்கி, இழப்பீட்டுத் தொகையை வழங்க முடிவெடுத்தது. இதற்கு மாநில அரசுகளும் இசைவு தெரிவித்தன. அதன்படி, கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.1.1 லட்சம் கோடியும், 2021-22-ல் ரூ.1.59 லட்சம் கோடியும் கடனாக பெற்றது. இதன்மூலம், மேல் வரி வருவாயில் ஏற்பட்ட இழப்பு சீரமைக்கப்பட்டது.
கரோனா பாதிப்பு குறைந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகளின் காரணமாக மத்திய அரசின் மேல் வரி உட்பட மாதாந்திர ஜிஎஸ்டி வசூலில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களுக்கான முழுமையான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மாநிலங்களுக்கு ரூ.17,973 கோடி இழப்பீட்டுத் தொகை நிலுவை வழங்க வேண்டியுள்ளது. அத்துடன் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான நிலுவை ரூ.21,322 கோடியாகும். மேலும், கடந்த ஜனவரி வரையிலான இழப்பீட்டு தொகை நிலுவை ரூ.47,617 கோடி என மொத்தமாக ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்மூலம் தற்போது வரை மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை நிலுவை ஏதும் இல்லை என்றும், இனி ஜூன் மாதத்துக்கான இழப்பீடு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு விடுவித்துள்ள இழப்பீட்டுத் தொகையில், தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி கிடைக்கும். புதுச்சேரிக்கு ரூ.576 கோடி வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ.14,145 கோடியும், உத்தர பிரதேசத்துக்கு ரூ.8,874 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.8,633 கோடியும், கேரளாவுக்கு ரூ.5,693 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.296 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.3,199 கோடியும், டெல்லிக்கு ரூ.8,012 கோடியும் வழங்கப்படுகிறது.
ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை விடுவிப்பு என்பது, மாநிலங்கள் இந்த நிதியாண்டின் மூலதனச் செலவு உள்ளிட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதிசெய்ய உதவும்.
முதல்வர் கோரிக்கை
கடந்த மே 26-ம் தேதி சென்னையில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழகத்துக்கு ரூ.14,006 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தெகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கான கால அவகாசத்தை வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
இழப்பீடுக்கான கால நீட்டிப்பு ஜூன் மாதத்துக்கு பிறகு இல்லை என்று கடந்த ஏப்ரல் 5-ம் தேதியே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரம், ஏற்கெனவே வழங்கப்பட்ட இழப்பீடு தொடர்பான கடன்களை அடைப்பதற்காக, வரும் 2026-ம் ஆண்டு வரை இழப்பீட்டு மேல் வரி வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.