புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 685 பேர் தோ்வாயினர். முதல் மூன்று இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 2021-ம்ஆண்டுக்கான பிரதான தேர்வுக்கான முடிவுகள் கடந்த மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 5 முதல் மே 26-ம் தேதி வரை நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதன் அடிப்படையில் யுபிஎஸ்சி தேர்வு இறுதி முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் நாடு முழுவதும் மொத்தம் 685 பேர் தேர்வாகியுள்ளனர். பொதுப்பிரிவில் 244 பேரும், பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் 73 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் 203 பேரும், தாழ்த்தப்பட்டோர் 105 பேரும் பழங்குடியினர் 60 பேரும் தேர்வாகியுள்ளனர். முதல் இடத்தை சுருதி சர்மா, இரண்டாவது இடத்தை அங்கிதா அகர்வால், மூன்றாவது இடத்தை காமினி சிங்லா ஆகியோர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
2021-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் போது, இந்தியாவின் வளர்ச்சி பயணத்தின் முக்கியமான நேரத்தில் நிர்வாக பணியை துவங்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துகள்.
தேர்வில் தேர்ச்சிபெற முடியாதவர்களின் ஏமாற்றத்தை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். ஆனால், அவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் முத்திரை பதித்து இந்தியாவை பெருமைப்படுத்தக் கூடிய இளைஞர்கள் என்பதை அறிவேன். அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.