காத்மாண்டு : நேபாள விமான விபத்தில் உயிர் இழந்த, 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், இரு தினங்களுக்கு முன், பொகாரா நகரில் இருந்து ஜாம்சம் நோக்கிச் சென்ற விமானம், மஸ்டாங் மாவட்டம் அருகே, மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்த நான்கு இந்தியர்கள் உட்பட, 22 பேரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று முன்தினம், உயிரிழந்த நிலையில், 21 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. வானிலை சரியில்லாததால் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாக, நேபாள அரசு அறிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்து இறந்த அனைவரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானத்தில், இந்தியாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர், ஜெர்மனியை சேர்ந்த இருவர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த, 13 பேர் பயணம் செய்துள்ளனர்.நேபாள அரசு, விமான விபத்து குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளது. மோசமான வானிலை காரணமாக, இடதுபுறம் திரும்ப வேண்டிய விமானம், சூறைக்காற்றின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல், வலது புறம் தள்ளப்பட்டு மலையில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என, கூறப்படுகிறது.இதற்கிடையே, விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகியுள்ள தகவலின் வாயிலாக, விபத்துக்கான காரணத்தை அறிய வாய்ப்பு ஏற்படும்.
கவிழ்ந்து விபத்து
நேபாளத்தில், எரிபொருள் டேங்கர் லாரி ஒன்று, பொகாரா விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, டேங்கரில் இருந்து வெளியேறிய எரிபொருள், விமான தளமெங்கும் வெள்ளமாய் வழிந்தோடியது. இதையடுத்து, விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த இரு விமானங்கள், மீண்டும் காத்மாண்டுவுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.
Advertisement