அசோக் திரிபாதி (54) ஒடிசா-வில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். பைரவி (51) மும்பை பி.கே.சி வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தனுஷ்(22) ரித்திகா (15) என இரண்டு பிள்ளைகள். அஷோக் – பைரவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதனால் பிள்ளைகளுடன் பைரவி மும்பையில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுக்காக சுற்றுலா செல்ல பேசி முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, சுற்றுலா நகரமான ஜோம்சம் நகருக்கு நேபாளத்தின் பொக்காரா-விலிருந்து நேற்று முன்தினம் காலை தாரா ஏர் என்ற விமானம் 22 பயணிகளுடன் புறப்பட்டது. அதில் அஷோக் திரிபாதி குடும்பமும் புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விமானம் மாயமானது.
அந்த விமானம் நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது பின்னர் தெரியவந்தது. இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. விமான விபத்தில் சிக்கியவர்களில் நான்கு பேரும் இந்தியா-வின் மராட்டாடிய மாநிலத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நேபாளம் சென்று மீண்டும் இணைந்து தங்கலின் வாழ்வை வாழ நினைத்தவர்களை மரணம் தழுவிக் கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.