எஸ்.இர்ஷாத் அஹமது – தஞ்சாவூர்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தமிழக முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின்போது வீடியோ எடுத்த வேந்தர் தொலைக்காட்சி சேனலின் செய்தியாளரை முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நெட்டித் தள்ளி தாக்கியதில் அச்செய்தியாளர் காயமடைந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, செய்தியாளரைத் தாக்கியதாகக் கூறப்படும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் வடபாதி கொக்கேரி கிராமம் பீமனோடை வடிகாலில் ரூ. 14.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இரண்டாவது நாளான இன்று நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் ராமச்சந்திரன் வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்து பொதுமக்களில் சிலர் முதல்வரிடம் மனு கொடுப்பதற்காக முண்டியடித்து பாதுகாப்பு வளையத்தை தாண்டி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதனால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த வேந்தர் தொலைக்காட்சி சேனலின் மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் ஆரிஸ் தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அப்போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த செய்தியாளரை தாக்கி நெஞ்சில் கையை வைத்து பலங்கொண்ட மட்டும் நெட்டித் தள்ளிக் கொண்டே சென்றுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏனைய பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பாதுகாப்பு அதிகாரியை சத்தம் போட்டுள்ளனர். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வழியே வந்த காரில் தாவி ஏறி தொங்கிக் கொண்டே சென்றுவிட்டார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த செய்தியாளர் ஆரிஸ் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, “முதலமைச்சரிடம் மனு கொடுக்க அங்கிருந்த பொதுமக்கள் முயன்றனர். ஆனால் அவர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அங்கே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அதை நான் எனது மொபைலில் வீடியோ படமெடுத்தேன். அதைக் கவனித்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் எனது நெஞ்சில் இரண்டு மூன்று முறை பலமாகக் குத்தியதுடன், எனது நெஞ்சில் கையை வைத்து பலங்கொண்ட மட்டும் நெட்டித் தள்ளிக்கொண்டே சென்றார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏனைய செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பாதுகாப்பு அதிகாரியை சத்தம் போட்டனர். ஆனால் அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அங்கிருந்து அவ்வழியே வந்த காரில் ஏறி தொற்றிக் கொண்டு சென்றுவிட்டார்,” என்று கூறினார்.
மேலும் அவர், “பாதுகாப்பு அதிகாரி தாக்கியதில் நெஞ்சில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வலது காலில் இரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளது” என்றும் கூறி குறிப்பிட்டள்ளார்.
செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான பாதுகாப்பு அதிகாரி தற்போது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
#WATCH || முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் செல்லும் போது செய்தியாளரை தள்ளிவிட்ட பாதுகாப்பு போலீஸ்!https://t.co/gkgoZMIuaK | #CMMKSTALIN | #TamilNadu | @mkstalin pic.twitter.com/6SrMP3hJqU
— Indian Express Tamil (@IeTamil) May 31, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil