புல் போர்த்திய மைதானத்தில் ஆடப்படும் கிரிக்கெட் மட்டும்தான் இந்த ஆட்டத்தை இத்தனை ஆழமாக ரசிக்க வைக்கிறதா? அடிக்கப்படும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் வீழ்த்தப்படும் விக்கெட்டுகளும் அவற்றை உற்பத்தி செய்யும் வீரர்களும் மட்டும்தான் இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றனரா? நிச்சயமாக இல்லை. இந்த ஆட்டத்தை சார்ந்து இயங்கும் மற்ற விஷயங்களுமே கூட இதன் மீதான சுவாரஸ்யத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.
ஹர்ஷா போக்லேவின் கமெண்ட்ரி இல்லாத ஆட்டமும், உடல் முழுவதும் தேசியக்கொடியை வரைந்து ‘சச்சின்… சச்சின்…’ என ஆராவாரமிடும் சுதீரின் கொடியசைப்பும் இல்லாத சச்சினின் இன்னிங்ஸ்களும் அவ்வளவு வசீகரமாக இருக்காது. இந்த வரிசையில் அம்பயர்களையும் பட்டியலிடலாம். கையைக் கட்டிக்கொண்டு நாள் முழுவதும் நின்ற இடத்திலேயே சிலை போல நிற்கும் வேலை. ஆனால், அதையுமே ஒரு தனி ரசனையோடு செய்து ரசிகர்களைக் கவர்ந்த ஆட்களும் இருக்கவே செய்கின்றனர்.
பில்லி பௌடனின் சிக்ஸர், பவுண்டரி சைகைகளை தனியாக வெட்டி ஸ்டேட்டஸ் போடுமளவுக்கு எல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படியான அம்பயர்களை பற்றிப் பேசும்போது ஸ்டீவ் பக்னரை பற்றிப் பேசாமல் கடந்துவிட முடியாது. ஸ்டீவ் பக்னர் பலராலும் ரசிக்கப்பட்ட அம்பயர் கிடையாது. சொல்லப்போனால் பலராலும் வெறுக்கப்பட்டவர். ஆனாலும் கிரிக்கெட் வரலாற்றில் அவருக்கென தவிர்க்கவே முடியாத தனி ஓர் இடம் எப்போதுமே உண்டு. அவர் செய்திருக்கும் சாதனைகள் அப்படியானது.
வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஸ்டீவ் பக்னர் 1989 முதல் 2009 வரை நீண்ட நெடிய காலத்திற்கு அம்பயராகப் பணியாற்றியவர். இந்த 20 ஆண்டுகளில் 128 டெஸ்ட் போட்டிகளுக்கும் 181 ஒருநாள் போட்டிகளுக்கும் அம்பயராகச் செயல்பட்டிருக்கிறார். கிரிக்கெட் வரலாற்றிலேயே 100 டெஸ்ட் போட்டிகளுக்கு அம்பயராக நின்ற முதல் ஆள் ஸ்டீவ் பக்னர்தான். இவர் ஓய்வு பெறும் வரைக்குமே சர்வதேச போட்டிகளில் அதிகபட்சமாக அம்பயராக நின்றவர் என்னும் சாதனையும் இவருக்குதான் சொந்தமாக இருந்தது.
இதைவிட முக்கியமான விஷயம் உலகக்கோப்பை போட்டிகளின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இருக்கிறதோ இல்லையோ ஸ்டீவ் பக்னர் கட்டாயம் இருப்பார்.
உலகக்கோப்பை தொடர்களில் மட்டும் 44 போட்டிகளில் அம்பயராகச் செயல்பட்டிருக்கிறார். குறிப்பாக, 1992 முதல் 2007 வரை தொடர்ச்சியாக 5 உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிகளில் அம்பயராகச் செயல்பட்டிருக்கிறார்.
90களில் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கியவர்களுக்கு தங்களின் ஆதர்ச நாயகர்களின் முகத்தோடு சேர்த்து ஸ்டீவ் பக்னரின் முகமும் அவர் அவுட் வழங்கும் விதமும் கூட மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். முடிவுகளைத் தெரிவிக்க ஒவ்வொரு அம்பயரும் ஒவ்வொரு ஸ்டைலைக் கொண்டிருப்பர். ஸ்டீவ் பக்னர் கொஞ்சம் மெதுவாகவே முடிவுகளை அறிவிப்பார். பௌலர் அப்பீல் செய்யும்போது அவர்கள் தொண்டை கிழியக் கத்தி முடித்த பிறகு நிதானமாக யோசித்துவிட்டே மெதுவாக கைகளை உயர்த்துவார். அவர் கையை உயர்த்தி அவுட் கொடுக்கப்போகிறாரா இல்லை அப்படியே பேண்ட் பைக்குள் கையை விட்டபடியே நிற்கப்போகிறாரா என்பதே சர்ப்ரைஸாக இருக்கும். இதனாலயே ‘Slow Death Bucknor’ எனும் பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.
அதிகப்படியான போட்டிகள், எக்கச்சக்கமான உலகக்கோப்பை இறுதிப்போட்டிகள் எனச் சாதனைக்கு மேல் சாதனை செய்தவர் எனினும் இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகளுமே உண்டு. குறிப்பாக, இந்திய அணியும் இந்திய ரசிகர்களும் இவரை மறக்கவே முடியாதபடி சம்பவங்களைச் செய்துவிட்டிருக்கிறார்.
2007-08 காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னி டெஸ்ட்டில் நடந்த சர்ச்சைகள் இந்திய ரசிகர்களால் இன்றைக்கும் மறக்க முடியாதது.
அந்தப் போட்டியில் இந்திய அணியின் பௌலர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய அவுட்களை கூட வழங்காமல் விட்டிருப்பார்கள். அதேநேரத்தில், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அநியாயமாக சில அவுட்களை வழங்கியிருப்பார்கள். ஏறக்குறைய ஒரு 7-8 முடிவுகள் இந்திய அணிக்கு எதிரானதாக நியாயமற்ற முறையில் அமைந்திருக்கும். அந்தப் போட்டியில் அம்பயராகச் செயல்பட்டவர் ஸ்டீவ் பக்னர்தான். அந்தப் போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடிக்கவில்லை. அம்பயர்தான் தோற்கடித்தார் என்னும் அளவுக்கு மோசமான முடிவுகளை பக்னர் வழங்கியிருப்பார். இந்தப் போட்டி சர்ச்சையாக, அடுத்த போட்டியில் ஐ.சி.சி-யே இவரை அம்பயர்களின் பட்டியலிலிந்து நீக்கியிருக்கும்.
இந்த ஒரு சம்பவம் மட்டுமில்லை. சச்சினுக்குப் பல சமயங்களில் பௌலர்களைவிட பக்னர்தான் மிகப்பெரிய வில்லனாக அமைந்திருக்கிறார். சச்சின் ரசிகர்களிடம் பக்னர் பற்றிக் கேட்டால் அடிஷனல் சீட் வாங்கி வசைபாடுவார்கள். அந்தளவுக்கு மறக்கமுடியாத மோசமான முடிவுகளை வழங்கியிருக்கிறார்.
2007 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதிய போது போதிய வெளிச்சம் இல்லாத போதும் சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டத்தைத் தொடர்ந்ததால் அடுத்த ஐ.சி.சி தொடரிலிருந்தே ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட்டார்.
ஓய்வுபெற்று பலகாலம் கழித்து ஸ்டீவ் பக்னர் தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொண்டு வருத்தமெல்லாம் தெரிவித்திருந்தார். குறிப்பாக, அந்த சிட்னி டெஸ்ட்டை குறிப்பிட்டுதான் அதற்காக இன்னும் வேதனைப்படுவதாகக் கூறியிருந்தார்.
என இர்ஃபான் பதானும் இந்திய ரசிகர்களும் ஸ்டீவ் பக்னருக்கு பதிலடி கொடுத்திருந்தனர்.
இந்திய ரசிகர்களுக்கு ஸ்டீவ் பக்னர் ஒரு வில்லன்தான். ஆனால், முழுமையாக அவரின் கரியரை எடுத்துப்பார்த்தால் கிரிக்கெட்டின் சிறந்த அம்பயர்களில் ஒருவராகவே இருந்திருக்கிறார். 1992 உலகக்கோப்பையில் ஸ்டீவ் பக்னர் அம்பயராகச் செயல்பட்ட போது அவர் சொற்ப போட்டிகளை மட்டுமே அனுபவமாகக் கொண்டிருந்தார். அந்தத் தொடரில் அவர் மிகத் துல்லியமான முடிவுகளை வழங்கவே அத்தனை அணிகளின் கேப்டன்களும் சரி, நிர்வாகமும் சரி, பயங்கர திருப்தியடைந்தனர். சில போட்டிகள் மட்டுமே அனுபவம் கொண்ட பக்னரை உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு அம்பயராக்கினர். அங்கிருந்து தொடர்ந்து 5 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கு அவர்தான் அம்பயர்.
ICC இன் Elite Group அம்பயர்களின் துல்லியமான முடிவுகளின் சராசரி 94% ஆக இருந்த 2005-06 காலக்கட்டத்தில் 96%க்கும் மேல் சரியான முடிவுகளை வழங்கி பக்னர் ஆச்சர்யப்படுத்தியிருந்தார்.
நடப்பு ஐ.பி.எல் சீசனில் அம்பயர்களின் முடிவுகள் சர்ச்சையான போது ஹர்ஷா போக்லே ஒரு ட்வீட் செய்திருந்தார்.
“நீங்கள் அம்பயர்களின் முடிவுகள் குறித்து ஒரு சிறிய தேடலில் ஈடுபடுங்கள். உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். அம்பயர்கள் பல சமயங்களில் தவறுகளைவிட சரியானவற்றைத்தான் அதிகம் செய்கின்றனர்” எனக் கூறியிருப்பார். ஸ்டீவ் பக்னருக்கும் இது பொருந்தும்தானே!