கொல்கத்தா: 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் புருலியா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மகாராஷ்ட்ர முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கும், பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதற்கும் கண்டனம் தெரிவித்தார். ஒத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும்தான் கைது செய்யுமா? பாஜகவினரை கைது செய்யாதா என அவர் கேள்வி எழுப்பினார். பாஜக தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாகக் கூறினார். மக்கள் நலன் என்று வந்துவிட்டால் தான் யாருக்கும் அஞ்சுவதில்லை என்று தெரிவித்த மம்தா பானர்ஜி, வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.